மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

இனி டிக்-டொக்கிலும் பணம் சம்பாதிக்கலாம்!

இனி டிக்-டொக்கிலும் பணம் சம்பாதிக்கலாம்!

டிக் டொக், இந்திய இளைஞர்களின் பொழுதுபோக்கையே புரட்டிப்போட்ட அப்ளிகேஷன் என்று சொல்லலாம். அதிலேயே எல்லா நேரத்தையும் செலவழித்து, தனது வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லலாம்; அடடே! இந்திய இளைஞர்களுக்குள் இத்தனை திறமையா என்றும் ஆச்சரியப்படலாம். அந்தளவுக்கு ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் ஒரு சேர தனக்குள் வைத்திருக்கிறது இந்த டிக்டொக் அப்ளிகேஷன்.

பாடல் பாடுவது, நடனமாடுவது, புதிதாக கான்செப்ட்களை உருவாக்குவது என கிரியேட்டிவிட்டி என்றால் இதுதான் என்று சொல்லுமளவுக்கு அற்புதமான பல வீடியோக்களை உருவாக்குகின்றனர் இந்திய இளைஞர்கள். ‘நான் பாட்டு பாடுறேன் கேளுங்க’ என்று சொன்னால், ‘போய் படிக்கிற வேலையப் பாரு’ என்று மீண்டும் மீண்டும் ஒரே வாழ்க்கைச் சூழலுக்குள் அனுப்பி வைக்கப்பட்ட இளைஞர்கள் பாட்டு பாடி டிக் டொக்கில் அப்லோடு செய்தால், அதனை பத்து லட்சம் பேர் பார்க்கின்றனர். தன் மகனுக்கு/மகளுக்கு இவ்வளவு திறமைகள் இருக்கிறதா என்பதையே, அவர்களது டிக்-டொக் வீடியோக்களைப் பார்த்து தெரிந்துகொண்ட பெற்றவர்களும் இங்கே அதிகம். இவ்வளவு செய்தாலும் கடைசியில், இதனால் வாழ்க்கைக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா? என்ற ஒற்றைக் கேள்வியில் முடித்துவிடுவார்கள். இதனால் பெயரும் புகழும் கிடைக்குமே தவிர, பணம் கிடைக்காது. இதில் கிடைக்கும் பெயரை வைத்து, இன்னொரு சோஷியல் மீடியாவில் ஒரு சேனல் உருவாக்கி அதன்மூலம் சம்பாதிக்கவேண்டிய சூழலே இப்போதைக்கு இருக்கிறது. அதில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் பாதிக்கு பாதி என்பதால், எங்களுடைய திருப்திக்காக இதில் வீடியோ போடுகிறோம் என்று டிக்-டொக் கிரியேட்டர்கள் கடந்து செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், தனது புதிய முயற்சியாக, டிக்-டொக் கிரியேட்டர்கள் பணம் சம்பாதிப்பதற்கான வழியை சோதனை செய்துகொண்டிருக்கிறது டிக்-டொக்.

பரிசோதனை முயற்சியாக நடைபெற்ற சமீபத்திய சோதனையில், டிக்-டொக் கிரியேட்டரிகளின் அக்கவுண்டில் உள்ள ‘Bio' பகுதியில், வணிக நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான லிங்க்(Link)களை சேர்க்கும் விதத்தில் தனது அப்ளிகேஷனை மாற்றியமைத்திருக்கிறது டிக்-டொக்.

அதாவது, தங்களது பொருட்களை சந்தைப்படுத்த நினைக்கும் நிறுவனங்கள் அவற்றின் தன்மைக்கேற்ப டிக்-டொக் வீடியோக்களை உருவாக்கும் நபர்களை அணுகி, அவர்களது ‘Bio'வில் தங்களது நிறுவனத்தின் வியாபார தளத்தின் லிங்கை சேர்க்குமாறு வேண்டுகோள் வைப்பார்கள். எவ்வளவு பணம் என பேசி முடிக்கப்பட்ட பிறகு அந்த லிங்க் சேர்க்கப்பட்டு, அந்த கால அளவில் எவ்வளவு வியூஸ் மற்றும் லைக்குகளை வீடியோக்கள் பெறுகின்றனவோ, அதற்கேற்ப பணம் கொடுக்கப்படும். உதாரணத்திற்கு குழந்தைகளுக்கான வீடியோக்களை உருவாக்கும் நபர் என்றால், அவரது Bioவில் குழந்தைகள் விளையாடும் பொருட்களை விற்கும் நிறுவனத்தின் லிங்க் சேர்க்கப்படும்.

இப்போதே, பல டிக்-டொக் ஸ்டார்களை அந்த அப்ளிகேஷனில் இடம்பெறும் விளம்பரங்களில் நடிக்க வைத்திருக்கின்றனர். அதுபோலவே, இனி பல வியாபார நிறுவனங்களும் டிக்-டொக் ஸ்டார்களை அணுகி தங்களது விற்பனையை பெருக்கிக் கொள்வார்கள். இதனால் என்ன பிரயோஜனம் என்ற கேள்வியையும், டிக்-டொக் ஸ்டார்கள் தவிர்த்துவிடலாம்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon