மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

பிரதமர் வீடு பஞ்சமி நிலத்தில் என்றால் விசாரிப்பீர்களா? ஆணையத்தில் திமுக!

பிரதமர் வீடு பஞ்சமி நிலத்தில் என்றால் விசாரிப்பீர்களா? ஆணையத்தில் திமுக!

முரசொலி நிலம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் போதிய ஆதாரங்கள் இல்லையென ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்ட, பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் அரசியலை விட்டுவிலகத் தயார் என்றும், இல்லையெனில் ராமதாஸும், அன்புமணியும் அரசியலை விட்டு விலகிவிடுவார்களா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே முரசொலி நில விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார். இதுதொடர்பாக நவம்பர் 19ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், அன்றைய தினம் தமிழக தலைமைச் செயலாளர், முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி, புகார் அளித்த சீனிவாசன் ஆகியோர் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டுமென தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் இன்று (நவம்பர் 19) தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் முன்பு முரசொலி விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்றது. அதில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், புகார் அளித்த சீனிவாசன் ஆகியோர் ஆஜராகினர்.

முரசொலி நிர்வாகம் சார்பில் அதன் அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி புகார் குறித்த தனது ஆட்சேபத்தை எழுத்துப்பூர்வமாக அளித்தார். அதில், “தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் செயலாளர் என்று கூறப்படும் சீனிவாசனிடமிருந்து ஆணையம் ஒரு புகாரைப் பெற்றிருப்பதாக தோன்றுகிறது. அதில் சில அற்பமான, அவதூறான, அடிப்படையற்ற, ஆதாரமற்ற - முழுவதும் அரசியல் நெடியடிக்கும் புகாரை கூறியிருக்கிறார். எந்த டாக்குமென்ட் ஆதாரங்களும் அந்த புகாருடன் அளிக்கப்படவில்லை. சீனிவாசன் மீது சட்டப்படி கிரிமினல் மற்றும் சிவில் அவதூறு வழக்குகள் பதிவு செய்வதற்கு முரசொலி அறக்கட்டளைக்கு உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் இப்புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் அதிகார வரம்பு கிடையாது என்று குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, “புகாரில் நில உரிமை குறித்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளதால்- அது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரவரம்பிற்கு அப்பாற்பட்டது. புகார்தாரர் அரசியல் கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல. ஆகவே இது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட புகார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வகுத்துள்ள நடைமுறை விதிகளின் படி எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி அளிக்கப்பட்டுள்ள இந்த புகார் முறைப்படியானது அல்ல. ஆகவே புகாரை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள இயலாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள புகாரைப் பொறுத்தமட்டில் முரசொலி அலுவலகம் உள்ள நிலம், அதன் உரிமையாளர்களால் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரங்கள் மூலம் வாங்கப்பட்டு- அந்த நிலத்தின் மீது கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 83 வருடங்களுக்கான சொத்துப் பத்திரங்கள் உள்ளன. இந்த டாக்குமென்டுகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்து விசாரிக்கும் அதிகார வரம்பு சிவில் நீதிமன்றங்களுக்குத்தான் இருக்கிறதே தவிர- ஆணையத்திடம் இல்லை” என்று தெரிவித்துள்ள ஆர்.எஸ்.பாரதி,

“அபகரிக்கப்பட்டதாக புகார் கூறப்படும் சொத்து குறித்த முகவரி, சர்வே எண் போன்ற எந்த தகவலும் இல்லாத தெளிவற்ற புகாராக இருக்கிறது. அடிப்படையற்ற ஒரு புகாரை வைத்துக் கொண்டு சுற்றி வளைத்து ஒரு விசாரணையை நடத்தக் கூடாது.புகார் உள்நோக்கம் கொண்டது. தீய எண்ணம் உடையது. அரசியல் தன்மையுடையது.

புகாரின் சாரம்சத்திலிருந்தே இது “அரசியல் சண்டை” என்பது தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. புகாரில், “சமூக நீதியின் காவலர்கள் என்று உரிமை கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகம்” என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, “அரசியல் உள்நோக்கம்” என்ற கரை படிந்துள்ள இந்த புகார், ஆணையத்தை பயன்படுத்தி திமுக மீது சேற்றை வாரி இறைக்கவும், அவதூறு பரப்புவதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த காரணங்களின் அடிப்படையிலும் புகார் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.

மேற்கண்ட விளக்கங்களுக்கு எந்த பங்கமும் வராத வகையில், சொத்தின் உரிமையாளர்கள் பொருத்தமான, சட்டப்படி தகுதி வாய்ந்த அதிகாரி முன்போ அல்லது நீதிமன்றத்தின் முன்போ அந்த நிலத்தின் எந்த ஒரு பகுதியும், எந்த காலகட்டத்திலும் பஞ்சமி நிலமாகவும் இல்லை அல்லது பஞ்சமி நிலமாக வகைப்படுத்தப்படவும் இல்லை என்பதை அந்த நீதிமன்றத்தின் முன்போ அல்லது அதிகாரி முன்போ- முறைப்படியும், சட்டப்படியும் புகார் ஏதேனும் கொடுக்கப்பட்டால், நிரூபிக்க தயாராக இருக்கிறார்கள் என்று சமர்ப்பிக்கப்படுகிறது.

மேற்கண்ட சமர்பிப்புகளின் அடிப்படையில், ஆணையத்தின் அதிகார வரம்பு குறித்த எங்களது ஆட்சேபனைகளை முதலில் விசாரித்து- அதன் விளைவாக 21.10.2019 தேதியிட்ட புகாரினை டிஸ்மிஸ் செய்து, அந்த புகாரை அளித்தவர் மீது கூடுதல் செலவு தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “புகார் அளித்த எதிர்மனுதாரரான சீனிவாசன் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். தலைமைச் செயலாளர் சண்முகமும் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். வாய்தா வாங்குவது எதைக் காட்டுகிறது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். எங்கள் மடியில் கனமில்லை. தகுந்த ஆதாரங்களோடு புகார் பொய் என்று நிரூபிக்க வந்தோம். முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரம் சீனிவாசனிடம் இல்லை. சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும் புகார் அளித்தால் அதுதொடர்பாக விசாரணை நடத்துவீர்களா என்று நான் ஆணையரைப் பார்த்துக் கேட்டேன். பிரதமர் வாழும் வீடு பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் அதனை விசாரிப்பீர்களா? எனவும் கேள்வி எழுப்பினேன். இதற்கு பதில் வரவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “பஞ்சமி நிலமா என்று தேடுவதற்கு தமிழக அரசுக்கு ஒரு மணி நேரம் போதுமானது. ஆனால், சம்மன் அனுப்பி இத்தனை நாட்கள் ஆகியும் அதனை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இருந்தால்தானே கிடைக்கும். ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அவதூறு பரப்புகிறார்கள்” என்று குறிப்பிட்டவர்,

“பொய்யாக வழக்கு தொடுத்தவர் மீது நாளை அவதூறு வழக்கு தொடரவுள்ளோம். இதனை முதல்முதலில் ஆரம்பித்துவைத்த மருத்துவரின் நிலம் 1000 ஏக்கர் யாருடையது என்பது குறித்தும் தெரிவிப்போம். ஆகவே, இன்றே விசாரணை முடிந்துவிட்டது. இனி விசாரணையும் நடைபெறாது” என்றும் தெரிவித்தார்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon