மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

சாலையில் நடனம்: போக்குவரத்தைச் சரி செய்ய புது முயற்சி!

சாலையில் நடனம்: போக்குவரத்தைச் சரி செய்ய புது முயற்சி!

மத்திய பிரதேச மாநில எம்பிஏ மாணவி ஒருவர் நடனமாடிக்கொண்டே போக்குவரத்தைச் சரி செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புனேவில் உள்ள சிம்பியோசிஸ் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பயின்று வருபவர் மாணவி சுபி ஜெயின். சாகர் மாவட்டத்தில் உள்ள பீனா நகரில் வசித்து வரும் அவர், இந்தூரில் சாலைப் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் 15 நாட்கள் பயிற்சிக்காக ஈடுபட்டுள்ளார். அவர் நடனமாடியபடி ட்ராபிக்கை ஒழுங்கு செய்வதும், வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை விளக்கிக் கூறும் பலரையும் கவர்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இவ்வாறான வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறித்து சுபி பேசும் போது, “புனேவில் எம்பிஏ படித்து வரும் நான், இங்கு சாலை பாதுகாப்புப் பணியில் தன்னார்வலராக இணைந்துள்ளேன். போக்குவரத்து விதிகள் குறித்து சில மாணவர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைப் பார்த்த எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது.

2022ஆம் ஆண்டுக்குள் இந்தூரை போக்குவரத்து ஒழுங்கு கொண்ட நகரமாக மாற்றியமைப்பதை இந்தூர் ஏடிஜிபி தனது முக்கிய குறிக்கோளாகத் தெரிவித்துள்ளார். அது குறித்து மக்களிடம் சரியான விழிப்புணர்வு இருந்திருந்தால் நாங்கள் இத்தனை தீவிரமாக இந்த பணியில் ஈடுபட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இங்கு, சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம், சரியான பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்த வேண்டியதன் தேவை, ஒலிப்பான்களை சரியாக பயன்படுத்துவதன் அவசியம் போன்றவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக ரஞ்ஜீத் சிங் என்ற போக்குவரத்துக் காவலர், மைக்கேல் ஜாக்ஸனின் மூன்வாக் நடன அசைவுகள் மூலம் போக்குவரத்தை சரி செய்தது இணையத்தில் வைரலானது. அதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் ஆட்லின் டிசோசா என்ற ஆறு வயது சிறுமி, விண்வெளி வீரர் போன்று உடையணிந்து மங்களூரு சாலையில் நிலவின் பரப்பு போன்று தோற்றமளிக்கும் குண்டு குழி நிறைந்த சாலைகளில் நடந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்த நிலையில் நடன அசைவுகளுடன் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவி சுபியின் செயல் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon