மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

பாத்திமா தற்கொலை: கேரளா விரையும் மத்திய குற்றப்பிரிவு!

பாத்திமா தற்கொலை: கேரளா விரையும் மத்திய குற்றப்பிரிவு!

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து விசாரணை நடத்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா விரையவுள்ளனர்.

கடந்த 9ஆம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய பேராசிரியர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாத்திமாவின் தாய், சகோதரி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி இன்று கேரளா செல்லவுள்ளனர். அங்கு விடுமுறைக்காகச் சென்றுள்ள பாத்திமாவின் தோழிகளிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.இது ஒருபுறமிருக்க, முக்கிய ஆதாரமாக இருக்கும் பாத்திமா செல்போனின் ஆய்வக முடிவுக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் காத்திருக்கின்றனர்.

போராட்டம் வாபஸ்

பாத்திமாவின் பெற்றோர்கள் கூறும் குற்றச்சாட்டு குறித்து உள் விசாரணை நடத்த வேண்டும், மாணவர்களின் மன நலனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும், ஐஐடி வளாகத்தில் துன்புறுத்தல், பாகுபாடு போன்ற சிக்கல்களைக் கையாள ஒவ்வொரு துறைக்கும் குறைத் தீர் அமைப்பு உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முதல் ஐஐடி மாணவர்களான அஜர் மொய்தீன் மற்றும் ஜஸ்டின் ஜோசப் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக மற்ற மாணவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஐஐடி நிர்வாகம் விளக்க அறிக்கை தர தயாராக இருப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon