மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

கொலை வழக்கில் விடுதலையானவுடன் கொலை!

கொலை வழக்கில் விடுதலையானவுடன் கொலை!

இரண்டு வருடங்களுக்கு முன்பாக நடந்த கொலை வழக்கு ஒன்றில் நேற்று புதுச்சேரி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் அனைவரையும் விடுதலை செய்தது. விடுதலையானவர்களில் ஒருவரான ஆர் (எ) அமர்நாத் காரில் தஞ்சாவூர் செல்வதற்காக உறவினர்களுடன் காரில் புறப்பட்டுள்ளார். அப்போது, வழியில் டாஸ்மாக் ஒன்றில் காரை நிறுத்தி மதுபாட்டில் வாங்கியுள்ளனர். அந்த சமயத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அமர்நாத்தை சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பியோடியது.

கொலையின் பின்னணி பற்றிய விசாரணையை காவல் துறை ஒருபக்கம் தீவிரப்படுத்த, நாமும் ஒருபக்கம் புலனாய்வில் இறங்கினோம்.

புதுச்சேரியில் பெரிய பெரிய ரவுடிகளெல்லாம் அதிலிருந்து ஒதுங்கி கவுரவமான தொழிலைத் தேடிக்கொண்டனர். சில ரவுடிகள் சிறைக்குள் அடைபட்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ரவுடிகளிடம் அடியாட்களாக இருந்த பலர், புதுச்சேரி நகரப் பகுதிகளிலுள்ள வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்து பிழைத்துவந்தனர். இவர்களில் முரளி, சுந்தர் இருவரும் நெருக்கமான நண்பர்களாக வலம் வந்தனர். அப்போது ரவுடி மணிகண்டனுடன் இணைந்து ஜெகன் என்ற ரவுடியை காவல் பாதுகாப்பில் சென்றபோதே வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். அதன் பிறகு மாமூல் வசூலிப்பதில் ஏரியா பிரிப்பது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பிரிந்தனர்.

ஏரியா பிரிப்பது தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க சுந்தர், இரண்டு வருடத்திற்கு முன்பு தட்டாஞ்சாவடி செந்தில் என்பரின் உதவியை நாடினார். செந்திலும் தனக்கு சொந்தமான கவுண்ட பாளையம் இடத்திற்கு சுந்தர், முரளி இருவரையும் அழைத்துப் பேசினார். அந்த சமயத்தில் சுந்தரும் அவரது நண்பர் அமர்நாத்தும் சேர்ந்து செந்தில் கண் முன்பே முரளியை வெட்டிக்கொலை செய்தனர். அத்தோடு, சடலத்தையும் விடாமல் எடுத்து எடுத்துச் சென்று பாக்குடையான்பட்டு அருகில் போட்டுவிட்டு தப்பித்து விட்டனர். கொலை தனது இடத்தில் நடைபெற்றதால், போலீஸிடம் சொல்ல முடியாமலும் வேறு வழி தெரியாமலும் ரத்தகரையையும் அடையாளத்தையும் தடயம் தெரியாமல் நண்பர்கள் மூலம் செந்தில் அழித்துவிட்டார்.

இதனையடுத்து, முரளி கொலை வழக்கில் தட்டாஞ்சாவடி செந்தில், சுந்தர், அமர்நாத், அசோக், சுரேஷ், பிரகாஷ், சூரியா, சரத், மணிமொழி உட்பட 12 பேரைப் புதுச்சேரி போலீஸ் கைதுசெய்தது. அதில் செந்தில், சுந்தர், அமர்நாத் மூவரைத் தவிர மற்ற 9 பேரும் அப்போதே ஜாமீனின் வெளிவந்துவிட்டனர். வழக்கை விசாரித்த புதுச்சேரி நீதிமன்ற நீதிபதி சுபா அன்புமணி, வழக்கில் சரியான சாட்சிகள் இல்லாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் 12 பேரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து சிறையில் இருந்த செந்தில், அமர்நாத் இருவரும் நேற்றே மாலை விடுதலையாகினர். சுந்தர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பதால் இன்னும் ஆறுமாதம் காலம் சிறைக்குள் இருக்கவேண்டியுள்ளது.

சிறையிலிருந்து வெளிவந்துள்ள நிலையில் அமர்நாத் புதுச்சேரியில் தங்கினால் மீண்டும் பழிக்குப் பழி கொலைசெய்யப்படலாம் என்று பயந்துபோன தந்தை பாண்டியன், மாமா உதயகுமார் இருவரும் சேர்ந்து கடலூர் வழியாக அமர்நாத்தை தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.

கடலூர் அடுத்து வடலூர் வழியாக சேத்தியாத்தோப்பு நோக்கி கார் சென்றபோது, கருங்குழி அருகேயுள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் நிறுத்தினர். உதயகுமாரும் அவரது நண்பர்களும் மது வாங்கிவரச் செல்ல காருக்குள் அமர்ந்து அமர்நாத் தந்தை பாண்டியனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மூன்று பைக்கில் வந்திறங்கிய 7பேர் கொண்ட கும்பல் காரிலிருந்து அமர்நாத்தை வெளியில் இழுத்துப்போட்டு கத்தியால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டுத் தப்பித்துவிட்டனர்.முரளி கொலைக்கு பழிவாங்க அமர்நாத் கொலை நடந்ததா அல்லது நண்பர்களே கொன்றனரா என்ற குழப்பத்தில் அமர்நாத் உறவினர்கள் உள்ளனர்.

கொலைக் குற்றவாளிகளைத் தேடி தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது கடலூர் காவல் துறை. எனினும் உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்கும் முன்பு வழக்கம்போல டம்மி ஆட்களை ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளது புதுச்சேரியில் உள்ள ஒரு தாதா குரூப் என்கிறார்கள் புதுச்சேரி ஸ்பெஷல் டீம் போலீஸ்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon