மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

வன்முறையைத் தூண்டும் அமைச்சர்: டிஜிபியிடம் திமுக புகார்!

வன்முறையைத் தூண்டும் அமைச்சர்: டிஜிபியிடம் திமுக புகார்!வெற்றிநடை போடும் தமிழகம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “உள்ளாட்சித் தேர்தலில் திமுகக்காரன் அண்ணா திமுகக்காரனின் சட்டையைத் தொட்டான் என்றால் திமுகக்காரனின் சட்டையைக் கிழிக்கணும். நம்ம வீட்டுக் கதவை திமுகக்காரன் தட்டினான்னா, திமுகக்காரன் வீட்டுக் கதவை உடைக்கணும். இதான் நமது கொள்கை. ஏண்டா என் கதவைத் தட்டினேன்னு சொல்லி நியாயம் கேட்கக் கூடாது. முதல்ல உடைச்சிட்டு அப்புறம்தான் பேசணும். அதுல என்ன வந்தாலும், எது வந்தாலும் நான் பார்த்துகிறேன்” என்று பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினர் வெற்றிக்காக வன்முறையில் ஈடுபடலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிக்கொண்டிருக்க, அமைச்சரின் பேச்சும் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்தது.

இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 18) டிஜிபி திரிபாதியைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “வீடு புகுந்து தாக்க வேண்டும், அடித்து நொறுக்க வேண்டும், எது ஏற்பட்டாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என ஒரு அமைச்சர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அவர் மீது குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிஜிபியிடம் கேட்டிருக்கிறோம். காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையாகப் பேசுவதும், அவர்மீது புகார் அளிக்கப்படுவதும் இது முதன்முறையல்ல. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசியதற்காக அவர்மீது மக்கள் நீதி மய்யத்தினர் பல இடங்களில் புகார் அளித்தனர். அதுபோலவே அண்மையில்கூட, இஸ்லாமியர்களை அவதூறாகப் பேசியதற்காக அவருக்கு எதிராக இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் தற்போது, மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon