மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

விக்ரம் மகன் அறிமுகம்: மொத்தம் 22 கோடி செலவு!

விக்ரம் மகன் அறிமுகம்: மொத்தம் 22 கோடி செலவு!

நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஒரு நடிகர் அறிமுகமாவதற்கு 22 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தமிழ் சினிமாவையே ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறது.

நவம்பர் 22 அன்று வெளியாக உள்ள ஆதித்ய வர்மா, தெலுங்கில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக். இப்படத்தை துருவ் நடிக்க பாலா இயக்கியிருந்தார். படத்தின் முதல் பிரதியை பார்த்த விக்ரம் மற்றும் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. மூன்று மணி நேரம் ஓடக்கூடிய தெலுங்கு படத்தை இரண்டேகால் மணி நேரமாக சுருட்டி இருந்தார் பாலா. அதிலும், அந்தப் படத்தில் இருந்த கான்செப்டே இல்லாமல், ஏதோவொரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

தெலுங்கு படத்தில் இருந்த முக்கியமான செண்டிமெண்ட் காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. அதையும் எடுத்து தருமாறு பாலாவிடம் விக்ரம் கோரிக்கை வைத்தார். இதற்குமேல் எதையும் படத்தில்சேர்க்க முடியாது என்று பாலா கூறிவிட,

தன் மகனின் எதிர்கால நலன் கருதி அந்தப்படத்தை ரிலீஸ் செய்வது இல்லை என தயாரிப்பாளர் மூலம் அறிவித்தார் விக்ரம்.

ஆதித்ய வர்மா படத்தின் தெலுங்கு இணை இயக்குனர் இயக்கத்தில் ஆதித்ய வர்மா படப்பிடிப்பை மீண்டும் புதிதாக

நடத்துவதற்கு ஐந்து கோடி ரூபாய் விக்ரம் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் தரப்பு கூடுதலாக மூன்று கோடி ரூபாய் செலவழித்து படத்தை தயாரித்து முடித்துள்ளனர். பாலா இயக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றபோது தயாரிப்பாளர் 9 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அது போதவில்லை என்று விக்ரமிடம் கூடுதலாக 3 கோடி ரூபாய் பாலா வாங்கியுள்ளார்.

முதல் ஆதித்ய வர்மா படப்பிடிப்புக்கு 12 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு எந்த வகையிலும் பயன்படுத்தப்படாமல் முடக்கப்பட்டது. விக்ரம் விருப்பப்படி இரண்டாவதாக எடுக்கப்பட்ட ஆதித்ய வர்மா படத்திற்கு மொத்தம் 9 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. படத்தை வெளியிடுவதற்கான செலவு இரண்டு கோடி ரூபாய் வரை ஆகும். இதனால் தமிழக திரையரங்கு உரிமை அல்லது ஏரியா விநியோக உரிமை மூலம் சுமார் 12 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை வியாபாரம் பேசுவதற்காக தயாரிப்பாளரை தொடர்புகொண்ட மீடியேட்டர்களிடம் பொறுப்பாக பேசாததுடன், கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத விலையை தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதனால் ஆதித்ய வர்மா படத்தை வியாபாரம் பேசுவதற்கு விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை.

மொத்தத்தில் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக 22 கோடி ரூபாய் இதுவரை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் விக்ரம் மட்டும் மகனுக்காக 8 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். தற்போது படத்தை வெளியிட பணமில்லாமல் தயாரிப்பாளர் தடுமாறிக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து படமெடுக்கும் தமிழ் பட தயாரிப்பாளர் இல்லை என்பதால், ஆதித்யா வர்மா படத்தின் ஏரியா உரிமைக்கு கூடுதல் பணம் கொடுப்பதற்கு விநியோகஸ்தர்கள் விருப்பம் காட்டாததால் படத்தின் வெளியீட்டிற்கு விக்ரம் உதவி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆதித்ய வர்மா, ஆர்ப்பாட்டத்துடன் திரையரங்குகளில் அரங்கேற்றம் காண விக்ரம் விருப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon