மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

ஒடிசாவில் கமலுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

ஒடிசாவில் கமலுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டத்தை இன்று (நவம்பர் 19) வழங்கியுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக் கழகம் சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பல்லாண்டு காலமாக திரைத்துறை, கலாசாரம் மற்றும் கலை ஆகியவற்றில் பங்களிப்பு செய்து வருவதைப் பாராட்டி இந்த பட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக அவர் நேற்று ஒடிசா சென்றார். அங்கு முதல்வர் நவீன் பட்நாயக்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அரசியல் மற்றும் அரசியல் அல்லாத பல விஷயங்கள் குறித்து இருவரும் கலந்தாலோசித்ததாகத் தெரிகிறது. அப்போது முதல்வருக்குக் கமல் அசோக சக்கரத்தைப் பரிசளித்துள்ளார். இந்நிலையில் இன்று செஞ்சுரியன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் கமலுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய ஒடிசா முதல்வர், “கலை, சினிமா மற்றும் மனிதாபிமான படைப்புகள் மூலம் தனது வாழ்நாள் முழுவதும் தேசத்திற்குச் சேவை செய்தவர் கமல். சினிமாவில் பல புதிய சாதனைகளைச் செய்துள்ளார். சினிமா உலகில் இவரது புஷ்பக் படம் எப்போதும் சிறந்ததாக இருக்கிறது” என்று கமல் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

விருதைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்த கமல்ஹாசன், திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், தேசத்தின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவும் முன்வர வேண்டும் என்று மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, அங்குள்ள ’ராஜ் கமல் பட்டாம்பூச்சி தோட்டத்தை'யும், பல்கலைக்கழகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்களின் படைப்புகளையும் அவர் பார்வையிட்டார்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon