மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 3 ஆக 2020

இனி சுங்கச் சாவடிகளில் ஒரு ‘லேனில்’ மட்டுமே பணம் கட்ட முடியும்!

இனி சுங்கச் சாவடிகளில் ஒரு ‘லேனில்’ மட்டுமே பணம் கட்ட முடியும்!

டிசம்பர் 1 முதல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 48 டோல் பிளாசாக்களில் ஒரே ஒரு லேனில் மட்டுமே பணம் செலுத்த முடியும், மற்ற லேன்களில் ஃபாஸ்ட் டேக் முறை பின்பற்றப்படும்.

இந்திய நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டுவதென்பது, இளையராஜா பாடலை இரைச்சலுக்கு நடுவில் கேட்பதற்கு சமம். வெளியூருக்கோ அல்லது சொந்த ஊருக்கோ கிளம்பலாம் என டாப் கியரில் வண்டியை வேகமெடுக்க வேண்டும் என முடிவெடுக்கையில், சாலையைக் கடக்க கால்நடைகளும் அதே சமயம் முடிவெடுக்கும். சகிப்புத்தன்மையற்ற வாகன ஓட்டுநர்கள், இரவு நேரங்களில் கூட ‘ஹாரனை’ அடிக்கடி உபயோகிக்கும் கனவான்கள், இவர்களுக்கு மத்தியில் சுங்கவரி வசூலிக்கும் பிளாசாவில் காத்திருக்க வேண்டிய சூழல் என நெடுஞ்சாலை பயணம், நெடும் பயணம் தான். சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்துவது ஒரு புறம் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் என்றால், மற்றொரு சிக்கல் அங்கே வரிசையில் காத்திருப்பது.

இந்நிலையில், சுங்கச் சாவடிகளில் இனி ஒரே ஒரு லேனில் மட்டும் பணம் கட்டும் நடைமுறையும், மற்ற அனைத்து லேன்களிலும் ஃபாஸ்ட் டேக் பயண்படுத்தும் முறையும் வரவுள்ளது. என்.எச்.ஏ.ஐ (NHAI) அண்மையில் அறிவித்துள்ள அறிக்கையின்படி, டிசம்பர் 1 ஆம் தேதி முதல், அனைத்துச் சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாற்றப்படும் என்றும், சுங்கச்சாவடி கட்டணங்கள் ஃபாஸ்ட் டேக் மூலம் டிஜிட்டல் முறையில் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஃபாஸ்ட் டேக் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் அது முழுமையாக செயல்படவில்லை. தற்போது ஃபாஸ்ட் டேக் திட்டம் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 5 வழிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சுங்கச்சாவடி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பெட்ரோல் பங்குகள், பொதுச் சேவை மையம் (காமன் சர்வீஸ் சென்டர்) ஆகியவற்றில் ஃபாஸ்டேக் கார்டை பெறலாம். இந்த கார்டுகளை பெற ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ், வாகன உரிமையாளர்களின் ஆதார் கார்டு ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் தனி பயன்பாட்டு குறியீடு, ரகசிய குறியீட்டு எண்கள் வழங்கப்படும்.

மொபைல் ரீசார்ஜ் செய்வது போல உங்கள் ஃபாஸ்ட் டேக் கணக்கையும் நீங்கள் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியைக் கடக்கும் பொழுது வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, உங்கள் கணக்கில் உள்ள பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும். இதனால் பயணிகளின் நேரம் சேமிக்கப்படும், சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.

“2014 ஆம் ஆண்டின் அறிவிப்பின்படி, டேக் இல்லாத வாகனங்கள் செலுத்த வேண்டிய தொகையை விட இருமடங்கு செலுத்த வேண்டியிருக்கும்” என்று NHAI இன் பிராந்திய அதிகாரி பவன் குமார் கூறியுள்ளார். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 48 டோல் பிளாசாக்களில் ஒரே ஒரு லேனில் மட்டுமே பணம் செலுத்த முடியும். தற்போது 35 சுங்கச் சாவடிகளில் இத்திட்டம் சோதனை முயற்சியில் உள்ளது.

ஃபாஸ்ட் டேக் இல்லாமல் பணம் மூலம் கட்டணம் செலுத்த ஒரே ஒரு லேன் மட்டும் பணம் வாங்கும் டோலாக செயல்படுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஒரே நாடு, ஒரே டேக் எனும் இத்திட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாவது மட்டுமில்லாமல், பணம் மூலம் டோல் கட்டணம் செலுத்துபவர்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவுப்பு வாகன ஓட்டிகளை கட்டாயமாக இத்திட்டத்திற்கு கொண்டு வரும் செயல் என எதிர்ப்புக் குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன.

தேசிய நெடுஞ்சாலையில் 525 சுங்கச் சாவடிகளும், மாநில நெடுஞ்சாலையில் 500 சுங்கச் சாவடிகளும் உள்ளன. இந்த ஃபாஸ்ட் டேக் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு, தினமும் 25 முதல் 30 கோடி வரை வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஃபாஸ்ட் டேக் குறித்த போதிய விழிப்புணர்வுகள் கிடைக்காத போது, குறிப்பாக ஆரம்ப நாட்களில் இது குழப்பத்திற்கு வழிவகுக்கும். ஃபாஸ்ட் டேக் அல்லாத பயனர்களுக்கு ஒரு வழிப்பாதையைத் திறந்து வைத்து, அவர்கள் அபராதமாக இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது ஃபாஸ்ட் டேக்கை கட்டாயமாக பின்பற்றியே ஆகவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட் டேக்கை பெறுவதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. தற்போது 30 சதவிகிதத்திற்கும் குறைவான வாகனங்களே ஃபாஸ்ட் டேக்கை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon