மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

மெழுகாக உருக வைக்கும் சைக்கோ பாடலின் மேஜிக்!

மெழுகாக உருக வைக்கும் சைக்கோ பாடலின் மேஜிக்!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகவுள்ள சைக்கோ திரைப்படத்தில் இடம் பெறும் உன்னை நெனைச்சு என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று (நவம்பர் 18) வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.

அமைதியான மனதில் அலையடிக்க வைக்கவும், அலைபாயும் மனதிற்கு அமைதியைத் தரவும் இசையால் முடியும். பலரது தனிமைக்கு துணைவனாகவும், நோய்க்கு மருந்தாகவும் கூட சில பாடல்கள் மாறி விடுகிறது. எல்லா பாடல்களும் அந்த மாதிரியான மேஜிக்கை செய்துவிடாது. அதற்கு பாடலின் இசை, பாடகரின் குரல், பாடல் வரிகள் என அனைத்தும் கேட்பவருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த விதத்தில் ‘உன்னை நெனைச்சு’ பாடல் அந்த மேஜிக்கை நிகழ்த்தியுள்ளது என்பதை ரசிகர்களின் வரவேற்பு உணர்த்துகின்றது.

இளையராஜா இசையில், சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடலுக்கான வரிகளை கபிலன் எழுதியுள்ளார். கேட்கும் போதே காதுகளைத் தாண்டி ஊடுருவிச் சென்று உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் விதமாக இந்த பாடலை உருவாக்கியுள்ளனர்.

சைக்கோ படத்தில் பார்வையற்ற நபராக உதயநிதி நடித்துள்ளார். உயிராக நேசிக்கும் காதலி தன்னை விட்டுச் சென்றதால் ஒரு பார்வையற்றவர் அனுபவிக்கும் வலியை உணர்த்தும் விதமாக உன்ன நெனச்சு பாடலின் வரிகள் அமைந்துள்ளது.

உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா

நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா

யாரோ அவளோ, என்னை தீண்டும் காற்றில் விரலோ

யாரோ அவளோ, தாலாட்டும் தாயின் குரலோ

பார்க்க முடியாமல், உருவம் தெரியாமல் தொடுதலையும், குரலையும் மட்டும் உணரும் ஒரு காதலன் தன் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் பாடுவதாக அமைந்த இந்த வரிகள் கேட்போர் நெஞ்சையும் மெழுகாக உருகச் செய்கிறது.

வாசம் ஓசை இவை தானே எந்தன் உறவே

உலகில் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே

கண்ணே உன்னால் என்னைக் கண்டேன்

கண்ணை மூடிக் காதல் கொண்டேன்

பார்வை போனாலும் பாதை நீதானே

காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவுமில்லை

எனக் காணாத காதலியை, கண்ணாக நினைத்து கவலை மறந்து காதலிக்கும் காதலனின் உணர்வை கவிதையாய் கடத்தியுள்ளனர். அத்துடன் பார்வையற்ற சகோதரர்களின் உணர்வுகளையும், வலிகளையும் குறித்து சிந்திக்கவும் வைத்துள்ளது. நேற்று (நவம்பர் 18) வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் முதன்முறையாகப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டபுள்மீனிங் புரடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழிமாணிக்கம் தயாரித்து, மிஷ்கின் இயக்கி இருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ், நித்யா மேனன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சைக்கோ திரைப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon