மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

இயற்கை நேசனுக்கு இந்திரா காந்தி விருது!

இயற்கை நேசனுக்கு இந்திரா காந்தி விருது!வெற்றிநடை போடும் தமிழகம்

இயற்கை ஆர்வலரும், வரலாற்று ஆய்வாளருமான டேவிட் அட்டன்பரோவிற்கு 2019ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி அமைதி விருது, ஆண்டுதோறும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு பன்னாட்டு அமைதி, வளர்ச்சி மற்றும் புதிய பொருளியல் அமைப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள்நலனுக்கு பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை விரிவுபடுத்தல் போன்றவற்றிற்கு அவர்களது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் விருதாகும். 1986ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளையினால் அமைக்கப்படும் சர்வதேச நடுவர் மன்றம் தேர்ந்தெடுக்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்படும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, இந்தாண்டிற்கான இந்திராகாந்தி அமைதி விருதுக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 93 வயதான டேவிட் அட்டன்பரோ இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான சர்வதேச நடுவர் குழு இவ்விருதுக்கு அட்டன்பரோ தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தது.

சர் டேவிட் அட்டன்பரோ(Sir David Attenborough) 1926 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர். பிபிசி நேச்சுரல் ஹிஸ்டரி சேனலுடன் இணைந்து, ஒன்பது இயற்கை வரலாற்று ஆவணத் தொடர்களை இயக்கியவர் இவர். பூமியில் உள்ள விலங்கு மற்றும் தாவர வாழ்க்கை குறித்த விரிவான கணக்கெடுப்பை உருவாக்கும் வகையில் பணியாற்றிய இவர் உலகப் புகழ்பெற்ற இயற்கை வரலாற்றாளராக கருதப்படுகிறார். இங்கிலாந்து தேசத்தின் பொக்கிஷமாகக் கருதப்படும் இவர் நூறு சிறந்த பிரிட்டன் வாசிகளுள் ஒருவராக 2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பிபிசி சர்வேயில் தேர்வாகினார்.

இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக விலங்குகளில் வாழ்வு முறைகள், இயற்கையோடு அவற்றுக்கு இருக்கும் உறவுகளைப் பதிவு செய்துவருகிறார்.டேவிட் அட்டன்பரோ பெயரை முதலில் கேள்விப்பட்ட போது புகழ்பெற்ற காந்தி பட இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ நினைவுக்கு வரலாம். இவர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் இளைய சகோதரர் ஆவார்.

டேவிட் அட்டன்பரோ காட்டில் வாழும் அபூர்வமான விலங்குகளில் இருந்து நம் தெருக்களில் வாழும் விலங்குகள் பற்றி நமக்குத் தெரியாத பல வாழ்வியல் பழக்கங்களை ஆவணமாக்கியுள்ளார். விலங்குகளின் புலப்பெயர்வு, உண்ணும் உணவு வகைகள், விசித்திரமான பழக்கங்கள், தந்திரமான வேட்டை முறைகள், குழுக்களாய் அலையும் குணங்கள் போன்ற அனைத்தையும் ஆவணப்படமாக்கியிருக்கிறார். இவர் இயக்கிய தி பிளானட் எர்த், லைஃப் ஆஃப் பேர்ட்ஸ், தி ப்ளூ பிளானட் ஆகியவை இயற்கை சார்ந்த முக்கியமான ஆவணப்படங்களாக கொண்டாடப்படுகின்றன.

“கேள்வி என்னவென்றால், புகைப்படத்தை தவிர இனி நம் பேரக்குழந்தைகள் ஒருபோதும் யானையைப் பார்க்க முடியாது என்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோமா?” - டேவிட் அட்டன்பரோ.

சென்றாண்டு டிசம்பர் மாதம், போலந்தில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தின் தொடக்க விழாவில் இவரது குரல் உலகை திரும்பிப் பார்க்கவைத்தது. டேவிட் அட்டன்பரோ இக்கூட்டத்தில், “தற்போதைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட இடர்களை உலகம் முழுவதும் நாம் சந்தித்து வருகிறோம். ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்களில் நமது மிகப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம். நாம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், நமது நாகரிகம் சரிவடைவதுடன், உலகம் அழிவுப்பாதையை நோக்கி செல்லும்” என தனது அறச்சீற்றத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்திரா காந்திஅறக்கட்டளையின் செயலாளர் சுமன் துபே இந்த விருது குறித்து கூறும் போது, “சர் அட்டன்பரோ அயராது உழைத்து மனிதகுலத்தை விழிப்படையவும், நமது கிரகத்தில் உள்ள பல்லுயிரியலைப் பாதுகாக்கவும், எல்லா உயிர்களுடனும் ஒரு நிலையான மற்றும் இணக்கமான வழியில் வாழவும் கற்றுக் கொடுத்திருக்கிறார்” எனக் கூறினார்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon