மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

ஓ. பன்னீரை வரவேற்ற ஒரே ஒரு அமைச்சர்!

ஓ. பன்னீரை வரவேற்ற ஒரே ஒரு அமைச்சர்!

துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் பத்து நாள் அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று (நவம்பர் 18) இரவு 8 மணியளவில் சென்னை விமான நிலையம் திரும்பினார். அவரோடு அதிகாரிகளும் திரும்பினார்கள்.

விமான நிலைய வாசலில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தனர்.

கட்சி நிர்வாகிகள் என்று பார்த்தால் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளரும் ஓபிஎஸ் சின் தீவிர ஆதரவாளருமான கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுகவின் மீனவரணி மாநிலச் செயலாளர் நீலாங்கரை முனுசாமி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் வந்திருந்தனர். ஓபிஎஸ். சை வரவேற்க ஒரே ஒரு அமைச்சராக வந்தவர் மாஃபா பாண்டியராஜன் தான். மற்ற எந்த அமைச்சரும் வரவில்லை. அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் விமான நிலையத்துக்கு வந்து ஓபிஎஸ் சை வரவேற்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணம் முடித்து சென்னை விமான நிலையம் திரும்பும்போது நள்ளிரவு கடந்துவிட்டது. அந்த நேரத்திலும் அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள் என்று அனைவரும் திரண்டு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால், துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் சை வரவேற்க ஒரே ஒரு அமைச்சர்... பன்னீருடன் தர்மயுத்தம் நடத்தச் சென்று பன்னீருடனேயே மீண்டும் வந்து அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் மட்டுமே.

விமான நிலையத்தில் இருந்து பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டுக்கு ஓ.பன்னீர் வந்ததும் அங்கே சென்று அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சரோஜா மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தனர்.

“இன்று அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் நிலையில் நேற்று இரவு எல்லா அமைச்சர்களும் சென்னையில்தான் இருந்தார்கள். ஆனால் மாஃபாவைத் தவிர ஒரு அமைச்சர் கூட துணை முதல்வரை வரவேற்க விமான நிலையம் செல்லவில்லை. எங்கிருந்தோ வந்த உத்தரவால்தானே இப்படி நடந்திருக்க முடியும்.இதில் ஓபிஎஸ் கடுமையான அப்செட்டில் இருக்கிறார்: என்கிறார்கள் ஓபிஎஸ் வட்டாரத்தில்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon