மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

ஆட்சியர் கார் மோதி மாணவி கவலைக்கிடம்!

ஆட்சியர் கார் மோதி மாணவி கவலைக்கிடம்!

பெரம்பலூர் அருகே அரியலூர் ஆட்சியர் கார் மோதி ஏற்பட்ட விபத்தில், கல்லூரி மாணவி படுகாயமடைந்துள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர், துறைமங்கலம் அருகே நடுத்தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருக்குக் குமரன் என்ற மகனும், கீர்த்திகா என்ற மகளும் உள்ளனர். கீர்த்திகா பெரம்பலூரில் உள்ள சாரதா கல்வியியல் கல்லூரியில் பிஎட் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று (நவம்பர் 18) மாலை 4 மணியளவில் கீர்த்திகா ஹோண்டா யூனிகான் என்ற இருசக்கர வாகனத்தில், அவர்களுக்குச் சொந்தமான வயலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். துறைமங்கலம் பாலத்தின் கீழ் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் போது, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் , கீர்த்திகா வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் கீர்த்திகா தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் வீக்கம் மற்றும் கை, கால் முதுகு ஆகிய பகுதிகளில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மாணவியை மீட்டு அங்கிருந்தவர்கள் லக்‌ஷ்மி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் விபத்து குறித்து கீர்த்திகாவின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்‌ஷ்மி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காகத் திருச்சி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் கீர்த்திகா. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வாகனம் அரியலூர் ஆட்சியர் ரத்னாவின் கார் என்பது தெரியவந்துள்ளது. அவரது தாய்,தந்தை இருவரும் ஆட்சியரின் காரில் திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும்போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து கீர்த்திகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து குறித்து ஆட்சியர் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon