மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

திமுக முயற்சி ஆபத்தானது: ராமதாஸ்

திமுக முயற்சி ஆபத்தானது: ராமதாஸ்

உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்துவது ஆபத்தான முயற்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்தது. எனினும் மூன்று ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாத சூழலே நிலவி வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் பலமுறை அவகாசம் கோரிவந்த தமிழக அரசு, கடைசியாக அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதியை அறிவித்துவிடுவோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் வேகமெடுக்கத் துவங்கின. வாக்குச் சீட்டு அச்சிடுவது, அரசு ஊழியர்களுக்கு பயிற்சி, இடமாற்றம் என தொடர்ந்து பணிகள் நடைபெற்றுவந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்க மேலும் ஒரு மாத காலம் வரை அவகாசம் வழங்க வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் கடைசி வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இதனால் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடாத, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக வழக்கறிஞர் ஜெயசுதின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர், “ஏற்கனவே தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு வேறு ஒரு அமர்வில் நிலுவையில் உள்ளது. தற்போது, தமிழகத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு என ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த 5 மாவட்டங்களுடன் சேர்த்து ஏற்கனவே இந்த மாவட்டங்கள் அங்கம் வகித்த திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் என 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மாநில தேர்தல் ஆணையம் முழுமையாக சட்டப்பூர்வமாக முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த வழக்கோடு நாங்கள் தொடர்ந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon