மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

ரஜினியும் கமலும் அரசியலில் இணைவார்களா?

ரஜினியும் கமலும் அரசியலில் இணைவார்களா?வெற்றிநடை போடும் தமிழகம்

ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் இணைய வேண்டுமென்ற கருத்து தொடர்பாக பிரபலங்கள் பதிலளித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், ரஜினிகாந்த், இளையராஜா, இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு கமல்ஹாசனை வாழ்த்திப் பேசினர். தளபதி 64 திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. எனினும் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய சந்திரசேகர், “ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரு ஜாம்பவான்களும் அரசியலில் சாதிப்பது நிச்சயம். என் ஆசை என்னவென்றால் கமல், ரஜினி ஆகிய இருவரும் சேர்ந்தால் தமிழகத்துக்கும், தமிழருக்கும் நல்லது” என்று விருப்பம் தெரிவித்தவர், “இதுவரை ஆண்டவர்கள் இனி ஆளப்போகிறவர்களுக்கு வழி விடட்டும். ஆண்ட பின்னர் இது போதுமென நினைத்து தம்பிமார்களுக்கு நீங்களும் வழிவிட்டுச் செல்லுங்கள்” என்று சொல்லி விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் மறைமுகமாக தெரிவித்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய ரஜினி-கமல் அரசியல் இணைவு என்பது இன்றைய நாளின் முக்கிய விவாதமாகவும், அரசியலில் புதிய திசையை நோக்கியும் நகர்ந்துள்ளது.

இதுதொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ள சந்திரசேகர், “ரஜினி - கமல் இணைய வேண்டும் என்ற என் ஆசையை கூறினேன். நேற்று பேசிய எந்த கருத்துக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை. நானும் விஜய்யும் அரசியல் குறித்து பேசுவது கிடையாது. இருவரையும் ஒரே மேடையில் பார்த்தேன். ஏன் இந்த மேடையை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று எனக்கு தோன்றியது. தம்பிக்கு வழிவிடுங்கள் என்று சொல்லவில்லை தம்பிமார்களுக்கு வழி விடுங்கள் என்று சொன்னேன். அவர்களுக்குப் பிறகு எத்தனையோ இளைஞர்கள் இருப்பார்கள். அதன் அடிப்படையில் பேசினேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டார். 6 சதவிகித வாக்குகளைப் பெற்று தன்னுடைய அபார சக்தியையும் நிரூபித்துவிட்டார். அரசியல் என்ற சமுத்திரத்தில் குதிக்கலாமா அல்லது வேண்டாமா என்ற எண்ணத்தில் ரஜினி இருக்கிறார். முதலில் ரஜினிகாந்த் அரசியல் என்ற சமுத்திரத்தில் குதிக்கட்டும். பிறகு இருவரும் இணையட்டும். அதிமுக என்னும் இமாலய சக்தியுடைய சிங்கத்தை யாராலும் நெருங்கக் கூட முடியாது. அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி.நாங்கள் நம்பியிருப்பது வாக்காளர்களையும் பொதுமக்களையும்தான்” என்று தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனோ, “ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக யூகமான செய்திகள்தான் வெளிவருகின்றன. அதிகாரப்பூர்வமாக வரும்போது அதுகுறித்து கருத்து தெரிவிக்கலாம். யாரும் கட்சி தொடங்கலாம். யாரும் யாருடனும் இணையலாம். தொடங்கிய பிறகுதான் அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பது தெரியவரும்” என்று குறிப்பிட்டார்.

ரஜினியும் கமலும் அரசியலில் இணைந்தால் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பியுள்ள நடிகர் பிரபு, “தங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இருவரும் நினைக்கிறார்கள். அவர்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. இருவரும் இணைந்தால் நாங்கள் ஆதரவளிப்போம்” என்று தெரிவித்தார். இதுபோலவே பல்வேறு தலைவர்களும், நடிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திங்கள், 18 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon