மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

நித்யானந்தா மீது எஃப்.ஐ.ஆர்!

நித்யானந்தா மீது எஃப்.ஐ.ஆர்!

தனது குழந்தைகளைக் கடத்தியதாக பெங்களூரில் வசித்து வரும் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் ஹிரபுராவில் அமைந்திருக்கும் நித்யானந்தாவிற்கு சொந்தமான யோகினி சவஜ்னபீடம் ஆஸ்ரமத்தில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஷர்மா என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் நித்யானந்தா மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

புகார் அளித்த, பெங்களூரைச் சேர்ந்த ஷர்மாவிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். 21, 19, 15 வயது நிரம்பிய அவரது மூன்று மகள்களும் 13 வயது நிரம்பிய அவரது மகனும் பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் வசித்து வந்தனர். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்னதாக அவர்கள் அங்கிருந்து அகமதாபாத்தில் அமைந்திருக்கும் ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு குழந்தைகள் சட்டவிரோதமாக சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்றும் அறிந்த ஷர்மா, குஜராத் மாநிலத்தின் குழந்தைகள் உரிமைக் காப்பக ஆணையத்தின் உதவியுடன் நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் இருந்து குழந்தைகளை மீட்டார்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு கடத்தல், திட்டமிட்டு தீங்கு விளைவித்தல், சட்டவிரோதமான சிறைபிடிப்பு, மிரட்டல், தீங்கு எண்ணத்துடன் அமைதியை சீர்குலைத்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் போன்ற குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 114, 323, 344, 365, 504 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நித்யானந்தா மற்றும் அவரது உதவியாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த காவலர்கள், குழந்தைகள் ஆஸ்ரம வேலைகளில் வற்புறுத்தி ஈடுபடுத்தப்பட்டதாகவும், ஆஸ்ரம நிர்வாகிகள் கடுமையான வார்த்தைகள் கூறிக் குழந்தைகளை ஆயுதங்களால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கடத்தப்பட்டவில்லை என்றும் ஆஸ்ரமத்தில் சொந்த விருப்பத்தின் படி இருப்பதாகவும், தனது பெற்றோர் தான் கடத்தப்பட்டதாகக் கூறி தேவையற்ற பொய்ப்புகாரை அளித்துள்ளதாகவும் நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் வசித்து வரும் 19 வயதாகும் நித்யானந்திதா மா என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் எனது பெற்றோர் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராவார்கள் என்றும் குடும்ப பிரச்சனையை ஊடகங்களுக்கு முன்னர் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

திங்கள், 18 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon