மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபக்‌ஷே- ஐ.நா. விசாரணை அவ்வளவுதான்!

இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபக்‌ஷே- ஐ.நா. விசாரணை அவ்வளவுதான்!

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரான கோத்தபய ராஜபக்‌ஷே வெற்றி பெற்று அந்நாட்டின் புதிய அதிபர் ஆகிறார். இலங்கையின் அதிபர் தேர்தல் நவம்பர் 16 ஆம்தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த நிலையில், வாக்குப் பதிவு முடிந்ததுமே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. நேற்று நள்ளிரவு வரை தபால் ஓட்டுகள் எண்ணிக்கை நடைபெற்றதில் அதில் கோத்தபய ராஜபக்‌ஷே முன்னிலையில் இருந்தார். அதன் பின் ஒவ்வொரு தேர்தல் மாவட்டமாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இன்று காலை எட்டுமணியளவிலேயே பெரும்பாலான மாவட்டங்களில் கோத்தபய ராஜபக்‌ஷெ முன்னிலையில் இருந்த நிலையில், ‘நாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்துவருகிறோம். நமது தொண்டர்கள் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டார் கோத்தபய ராஜபக்‌ஷே.

இந்த நிலையில் பல மாவட்டங்களில் பின்னடவை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும் அதிபர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா, “ இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை இம்முறை நடத்த உதவியமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை எனது அரசியல் பயணத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். கட்சிப் பொறுப்பில் இருந்து விலகினாலும் மக்களுக்கான பணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபய ராஜபக்‌ஷேவின் வெற்றியை அடுத்து பல வெளிநாட்டுத் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

கோத்தபய ராஜபக்‌ஷே தேர்தல் பிரச்சாரத்தின் போதே, “ஐ.நா அமைப்புடன் நாங்கள் எப்போதும் இணைந்து செயல்படுவோம். ஆனால், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிப்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்துடன், முந்தைய இலங்கை அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும் நாங்கள் செயல்படுத்த மாட்டோம். போர்க்குற்றச்சாட்டுகளில் தவறாக சேர்க்கப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் விடுவிக்கப்படுவர்” என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கோத்தபயவின் வெற்றிக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களிடம் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 17 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon