மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

தனியார் பேருந்து மோதி மூவர் பலி!

தனியார் பேருந்து மோதி மூவர் பலி!

தமிழகத்தில் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக முதல்வர் மாவட்டமான சேலத்தில், அடிக்கடி தனியார் பேருந்துகளால் விபத்துகள் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. தனியார் பேருந்துகள் அதிகவேகமாக செல்வதாலேயே விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அதற்கு இதுவரை நடவடிக்கை எடுத்தப்பாடில்லை.

இந்நிலையில் இன்று அதிகாலை தனியார் பேருந்து மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா(40). இவருக்கு நித்யா(18) என்ற மகளும், சக்திவேல்(16) என்ற மகனும் இருந்துள்ளனர். மூவரும் இன்று (நவம்பர் 17) காலை 5.45 மணியளவில் கெங்கவல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

வீரகனூர் அருகே சென்றுகொண்டிருக்கும் போது அவ்வழியே வந்த தனியார் பேருந்து இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்துக்குள்ளான தனியார் பேருந்தின் ஓட்டுநர், வீரகனூர் காவல்நிலையத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், உயிரிழந்தது வெள்ளையூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி இதுபோன்று விபத்து ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிறு, 17 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon