மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

நான் திமுகவைச் சேர்ந்தவனா? ஸ்டாலின் கோபம்

நான் திமுகவைச் சேர்ந்தவனா?   ஸ்டாலின் கோபம்

திமுகவின் சேலம் மாவட்ட முன்னோடியும் முன்னாள் அமைச்சருமான மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூலான , ‘திராவிட இயக்கத்தில் என் பயணம்’ என்ற நூலை இன்று (நவம்பர் 17) சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் வீரபாண்டியாரின் மகன் வீரபாண்டி ராஜாவோடு பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், செல்வகணபதி உள்ளிட்ட அனைத்து கோஷ்டியினரும் கலந்துகொண்டனர். நூல் வெளியீட்டு விழாவுக்கு மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு வீரபாண்டி ராஜா நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கவில்லை. அவருக்கு பதிலாக இரண்டாவது மகன் பிரபு சென்று அழைப்பிதழ் கொடுத்தார். இப்படி உள்ளுக்குள் உரசல்கள் இருந்தாலும் அனைவரும் விழாவில் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, சேலம் எம்.பி. பார்த்திபன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய ஸ்டாலின், “ தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பெயர் இருக்கிறது. அந்த வகையில் இது சேலம் மாவட்டம் என்று அழைக்கப்பட்டாலும், இன்று வரை நாம் வீரபாண்டி மாவட்டம் என்றுதான் அழைத்து வருகிறோம். அந்த அளவுக்கு வீரபாண்டியார் சேலம் மாவட்டத்தை தன் கைக்குள் வைத்திருந்தார்” என்று வீரபாண்டியாரை பற்றி புகழ்ந்துரைத்தார் ஸ்டாலின்.

“இன்று சர்ச்சைகுரிய ஒரு பொருள் மிசா. மிசாவில் ஸ்டாலின் இருந்தானா என்ற ஒரு சர்ச்சையை சில நாட்களாகவே தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதை விவாதிப்பது என்ற விவஸ்தையே இந்த நாட்டிலே இப்போது இல்லை. ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்தவனா என்று எந்த முட்டாளாவது கேட்பானா? அப்படி ஒரு முட்டாள் தனமான விவாதம்தான் நான் மிசாவில் சிறையில் இருந்தேனா இல்லையா என்பதும்.

மிசாவில் நான் இருந்தேன் என்று நிரூபிக்க வேண்டும் என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன். நான் மட்டுமா மிசாவில் இருந்தேன்? எத்தனையோ பேர் மிசாவில் இருந்தார்கள். நான் சென்னை என்று சொன்னால் அண்ணன் வீரபாண்டியார் சேலம் சிறையில் இருந்தார். பின் மதுரைக்கு மாற்றப்பட்டார். அண்ணன் வீரபாண்டியாரின் இந்த வரலாறு போல திமுக முன்னோடிகள் 100 பேர் எழுதினால் அதுவே கழகத்தின் வரலாறாக இருக்கும்” என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

“வீரபாண்டியாரின் வரலாற்று நூலுக்கு துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்ட வன்னியர் பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. ஆற்காடு வீராசாமி போன்ற வீரபாண்டியாரின் நெருக்கமான நண்பர்களும் அழைக்கப்படவில்லை. இதில் துரைமுருகன் போன்றவர்களுக்கு வருத்தம்தான்” என்கிறார்கள் விழாவில் கலந்துகொண்டவர்கள்.

ஞாயிறு, 17 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon