மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ரிலையன்ஸ் திவால்: அனில் அம்பானி ராஜினாமா

ரிலையன்ஸ் திவால்: அனில் அம்பானி ராஜினாமா

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான அனில் அம்பானி அந்நிறுவனம் திவாலாகும் நிலை நெருங்கிக்கொண்டிருப்பதால், நேற்று (நவம்பர் 16) சனிக்கிழமை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார்.

சாயா விராணி, ரைனா கரணி, மஞ்சரி கக்கர் மற்றும் சுரேஷ் ரங்காச்சர் ஆகியோரும் இயக்குநர்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மணிகாந்தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கூறிய ராஜினாமாக்கள் கடன் வழங்குநர்களின் குழுவில் அவர்களின் பரிசீலனைக்கு வைக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் ஒருங்கிணைந்த இழப்பு இரண்டாவது காலாண்டில் 30,142 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவால் கோட் 2016 விதிகளின் கீழ் நொடித்துப் போகும் பெருநிறுவன செயல்முறையின் கீழ் உள்ளது.

ரிலையன்ஸ் குழும நிறுவனரான திருபாய் அம்பானி காலமானபின், சகோதரர்களான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைந்து நிறுவனத்தைக் கவனித்து வந்தனர். 2005-ல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பாகப் பிரிவினை நடந்தது. அதன்படி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனங்களை முகேஷ் அம்பானி எடுத்துக் கொண்டார். ரிலையன்ஸ் இன்ஃபோ.காம், ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானிக்கு கிடைத்தன.

2006-ம் ஆண்டில் 14.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளோடு இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார் அனில் அம்பானி. முகேஷ் அம்பானியைவிட அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 550 கோடி ரூபாய் அப்போது அதிகமாக இருந்தது. ஆனால் அதன் பின் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெரு நட்டத்தை சந்தித்ததால் சரிவுப் பாதைக்குத் தள்ளப்பட்டார் அனில் அம்பானி.

ஞாயிறு, 17 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon