மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

ஐடி ரெய்டு: கரூரில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்!

ஐடி ரெய்டு: கரூரில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்!

கரூர் கொசுவலை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் கடந்த இரு நாட்களாக நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனையில் ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கரூரில் செம்மடை மற்றும் சின்ன தாராபுரம் ஆகிய பகுதிகளில் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இது தொழிலதிபரான சிவசாமி என்பவருக்குச் சொந்தமான ஆலையாகும். இங்கு தயாரிக்கப்படும் கொசுவலைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆலை நிர்வாகம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (நவம்பர் 15) 20க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஐந்து கார்களில் வந்த அதிகாரிகள், இம்பெக்ஸ் கொசுவலை தயாரிப்பு ஆலை, அலுவலகம் மற்றும் சிவசாமிக்குச் சொந்தமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் (நவம்பர் 16) தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வருமானவரித் தொடர்பான ஆவணங்கள் குறித்தும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கொசுவலை தொடர்பான ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த சோதனையின்போது அவரது வீட்டில் துணி அடுக்கும் அலமாரியில் கட்டுக்கட்டாக இருந்த, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மதிப்பு, 32 கோடி ரூபாய் என்றும் வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக ஜேப்பியார் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.5 கோடி பணம் என ரூ.350 கோடி மேலான அளவுக்குக் கணக்கில் காட்டப்படாத சொத்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 16 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon