மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

சிறப்புக் கட்டுரை: கல்வியும் தமிழ் சினிமாவும்!

சிறப்புக் கட்டுரை: கல்வியும் தமிழ் சினிமாவும்!

பிரதாப் பாஸ்கரதாஸ்

தமிழ் சமூகச் சூழலானது கல்வியில் மேம்பட்ட, கல்வி பெற இயலாத, கல்வி மறுக்கப்பட்ட எனக் கல்விக்கான பல படிநிலைகளை இத்தனை ஆண்டுக்காலமாக வைத்துக்கொண்டு வந்துள்ளது. கலாச்சார, சமய, சமூகக் கோட்பாடு என்று கல்வி அடைவதன் மீதான கட்டுப்பாடுகளை இச்சமூகம் இப்படி நிலைகளைக்கொண்டு கடைப்பிடித்து வந்தாலும் சீரிய அரசியல் மாற்றங்களினால் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் மாதிரியான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு மாற்றமடைந்தது.

ஆயினும் அவ்விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான சமூகச் சூழலும் முகாந்திரமும் தமிழ்ச் சூழல் மட்டுமின்றி இந்தியச் சூழலிலும் இல்லாத காரணத்தினால் கல்விப் பகிர்தல் இங்கு முறையாக நடந்தேறவில்லை. மேலும் இச்சூழலை அவ்வாறே தக்கவைத்திருக்கும் வகையில்தான் கல்வியைப் பற்றிய பார்வையும் உருவாக்கமும் தமிழ் சினிமா கடைப்பிடித்து வந்தது.

எழுபது எண்பதுகளில் அதாவது பாலசந்தர், பாலு மகேந்திரா மற்றும் மகேந்திரன் ஆகியோர் காலத்தின் தமிழ்ப் படங்கள், ஒருவன் கல்லாததால் தன் வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களை அடைகிறான் என்பது போன்ற கருத்துகளைக் கொண்டு வந்தது. தொண்ணூறுகளில் கல்வியின் மீதான விழிப்புணர்வு இல்லாவிட்டாலும் கல்லூரிகள் சார்ந்த படங்கள்தாம் அன்றைய காலகட்டத்தின் தமிழ் சினிமா கொண்ட கதைப் போக்கு மாற்றமாகும்.

பின்னர் 2000ஆம் முதலான ஆண்டுகளின் வாக்கில் வந்த அதிகப்படியான படங்களில் கதாநாயகக் கதாபாத்திரத்தைப் படிப்பில் பெரிதும் நாட்டமில்லாதவர்களாகவும், ஆங்கிலத்தில் திணறுபவர்களாகவும், காதல், நண்பர்கள் என்று ஊர் சுற்றித் திரிபவர்களாகவும் காட்சிப்படுத்தி வாழ்க்கையில் எவ்வித லட்சியமற்ற கதாநாயகக் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் குவிந்தன. வாழ்க்கையின் மீதான சீரிய பார்வை ஏதுமின்றி காட்சிப்படுத்தப்படும் இக்கதாநாயகக் கதாபாத்திரங்களை உன்னிப்பாகப் பார்த்தால் அது ஊதாரித்தனத்தைப் போற்றும் கதாபாத்திரங்களாகவே தெரியும்.

‌எண்பதுகளில் வந்த படங்களில் கல்வியைவிட அவரவர் கற்கும் அனுபவமே வாழ்க்கையின் இன்ப துன்பங்களைத் தீர்மானிக்கும் என்ற கருத்துகளைக் கொண்ட படங்கள் அன்றைய கால அன்றாட வயிற்றுப் பிரச்சினைக்கும் கல்விக்குமான இடைவெளியின் வெளிப்பாடாக இருந்தது. ஆனால் 2000ஆம் முதலான ஆண்டுகள் வாக்கில் வந்த படங்கள் கல்வியைக் கேலி செய்து உருவாக்கப்பட்டது என்பது தமிழ் சினிமா எத்தகைய பொறுப்பற்றதனமாக இருந்ததென்பதைக் காட்டுகிறது.

பெரும்பான்மை பார்வையாளர்களை கவரும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இந்தப் படங்கள் ஆங்கில மொழியைத் தேவையற்றதாகவும், பொழுதுபோக்குக்கான வகுப்பறைப் புறக்கணிப்பைக் கதாநாயகத்தனமாகவும், படிப்பே முழுநேர கதியாக இருப்பவர்களை நகைப்புக்குரிய கதாபாத்திரங்களாக உருவாக்கி அதைப் பொது சமூக மனநிலையாக மாற்றியது. இந்தப் படங்களில், படிப்பின் மீது தன் சுய புறக்கணித்தலால் ஏற்பட்ட விளைவாக வாழ்க்கையில் கடினப்படும் கதாபாத்திரம், தனக்கு வாழ்க்கையின் அனுபவம் போதுமானது என தன் தோல்வியையும் விரக்தியையும் மறைத்துக் கடந்து செல்வதைப் போன்று இன்று அதை எடுத்துக்காட்டாகக் கொண்டு வாழ்க்கையைக் கடக்கும் மனிதர்களின் நிலையே இந்த கல்வி விழிப்புணர்வற்றப் படங்கள் செய்த சாதனையாகும்.

விழிப்புணர்வடைந்த தமிழ் சினிமா

ஆனால், கல்வியின் மீதான இத்தகைய குறுகிய, விழிப்புணர்வற்ற கதைகளைக் கொண்டு வந்துள்ள தமிழ் சினிமா கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக கல்வியின் மீதான கற்பிதங்களை அறவே மாற்றி, கல்வியானது ஒரு தனிமனித வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி வருகிறது.

இதற்கு முன்பு வரை கல்வி நிலையங்களைக் கேளிக்கைக்கான இடமாக மட்டுமே காட்டி வந்த தமிழ் சினிமா தற்பொழுது கல்வி நிலையங்களில் நிகழும் அனைத்தையும் சிறிய பார்வை கொண்டு காட்சிப்படுத்தி வருகின்றது.

கல்வி என்பது ஒருவனை அச்சமற்றவனாகவும், ஒற்றுமையாகவும், உரிமைகளைத் தெரியப்படுத்தவும், உரிமைகளுக்காகப் போராடவும் தூண்டுகிறது என்றும் சுயமரியாதை கல்வியும் சமூகத்துக்குத் தேவையான கல்வி முறையும் அவசியம் எனவும் கல்வியைப் பற்றிப் பெரும் தலைவர்களான டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் போதித்ததை இந்தப் படங்கள் கல்வியின் தேவையைப் பற்றியும் கல்வி மீதான பார்வையையும் பரவலாக்கி முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.

அட்டகத்தி டு அசுரன்

இதற்குச் சான்றாக அட்டகத்தி முதல் அசுரன் வரையிலான திரைப்படங்களைக் கூற முடியும். அட்டக்கத்தி படத்தில் கதாநாயகன் கதாபாத்திரம் ‘ரூட் தலை’யாகச் சுற்றி வந்தாலும் படத்தின் இறுதியில் ‘ஆசிரியர் தினகரன் MA வரலாறு’ என்று காட்சிப்படுத்தப்படும் இடத்தில் அக்கதாபாத்திரம் படிப்பில் ஒரு லட்சியத்துடனே வடிவமைக்கப்பட்டது என்பதை உணர முடியும். பின்பு வந்த மெட்ராஸ் படத்தில் கதாநாயகனின் கதாபாத்திரமானது நன்கு படித்த, உயர்ந்த நிறுவனத்தில் பணிபுரிபவனாகவும் இறுதியில் மாணவர்களுக்குக் கல்வியுடன் சேர்த்து அரசியலையும் கற்பிப்பவனாக மாறும் கதாபாத்திரமாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

அதற்கடுத்து இதே மாதிரியான அரசியலும், இன்றைய கல்விமுறை சூழலும், இக்கல்விமுறையின் தாக்கம் குறித்த கேள்வியை கபாலி படமும், கல்வியின் தேவை குறித்து காலா படத்திலும் தொடர்ந்து கல்வியின் மீதான விவாதங்களை உருவாக்கும் படங்கள் வந்தது. அதற்கடுத்து வந்த மாவீரன் கிட்டு படம் எண்பதுகளில் நிகழ்ந்த கதைக்களமாக இருந்தாலும் கல்வி என்பது உழைக்கும் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கும் எந்த அளவில் முக்கியத் தேவை என்பதையும், அதைப் பெறுவதற்கு இச்சமூகத்தில் இருக்கும் தடுப்பான்களையும் பற்றி தீவிரமாகப் பேசியது.

ஆயினும் அதுவரை தமிழ்ச்சமூக கல்விச் சூழலைப் பற்றிக் காட்சிப்படுத்திடாத தமிழ் சினிமாவில், இன்றைய கல்வி முறையையும் கல்வி நிலையங்களிலும், வகுப்பறைகளிலும் நிகழ்வும் கல்வியைச் சார்ந்த, கல்வியினால் நிகழும் சமூக நிலவரத்தை அப்பட்டமான சினிமாவாக காட்சிப்படுத்தியது பரியேறும் பெருமாள்.

எதைப் பறித்தாலும் கல்வியை மட்டும் பறிக்க முடியாது எனும் கருத்தியல் பேசும் அசுரன் வரை கல்வியைப் பற்றிய சரியான பாதையை பொது சமூகத்திற்கு ஊட்டும் இம்மாதிரியான படங்களின் வரத்து தொடர்ந்து கொண்டுவருகிறது. அந்த வகையில் தற்பொழுது, கல்வியைப் பற்றிய நுட்பமான சீரிய பார்வையைப் பேசும் தமிழ் சினிமா, கல்வி மீதான திறந்த, பரவலான மேலோங்கிய பார்வையை சமூகத்தில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மேலும், இதனைத்தையும் கடந்து தற்காலத்திற்கு மிகவும் தேவையான கல்விமுறை மாற்றத்தையும் கல்வி நிலையங்களின் அரசியலையும் பேச வேண்டிய கட்டாயத்திற்கு இச்சமூகம் தள்ளப்பட்டிருப்பதனால் கல்விச்சூழலைப் பற்றிய முழுமையான அரசியலைக் காட்சிப்படுத்த வேண்டியது தமிழ் சினிமாவின் அவசியமாகிறது.

ஞாயிறு, 17 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon