மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

அயோத்தி: முஸ்லிம்சட்ட வாரியம் முக்கிய முடிவு!

அயோத்தி: முஸ்லிம்சட்ட வாரியம் முக்கிய முடிவு!

நவம்பர் 9 ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி- ராம ஜென்மபூமி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவெடுத்திருக்கிறது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டப்படி குற்றம்தான் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஆனால் அந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவிட்டதோடு, முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட அயோத்தியிலேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அரசியல் கட்சிகள் குறை சொல்லாவிட்டாலும், பல முஸ்லிம் அமைப்புகள் தீர்ப்பை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் நிர்வாகிகள் இன்று (நவம்பர் 17) காலை உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் கூடி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதித்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி, “உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஒரு கோவிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை என்று கூறியது. ஆனால் மசூதி எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே நாங்கள் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்து எங்களுடையது எது என்று கேட்போம். எங்கள் மறுஆய்வு மனு 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், நாங்கள் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இது எங்கள் உரிமை. மறுஆய்வு மனு நிராகரிக்கப்படும் என்று வாரிய உறுப்பினர்களில் பெரும்பாலோர் கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் கொள்கையளவில், கிடைக்கக் கூடிய அனைத்து சட்ட விருப்பங்களையும் ஆராய விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் இலியாஸ் ஊடகங்களிடம் பேசும்போது, “மஸ்ஜித் தவிர வேறு எந்த நிலத்தையும் எங்களால் ஏற்க முடியாது என்பதால் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் சொல்லியிருக்கும் 5 ஏக்கர் நிலத்தை நாங்கள் ஏற்கப் போவது கிடையாது” என்று கூறினார்.

கடந்த வாரம் ஒருமனதாக வழங்கப்பட்ட தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராம் கோயில் கட்டுவதற்கான வழியை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியதுடன், மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை உ.பி. சன்னி மத்திய வக்ஃப் வாரியம் வரவேற்றதோடு, இது தொடர்பாக எந்தவொரு ஆய்வுக்கும் செல்லமாட்டோம் என்று சொல்லியிருந்தது.

அதேவேளையில் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.

ஞாயிறு, 17 நவ 2019

அடுத்ததுchevronRight icon