மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

உள்ளாட்சித் தேர்தல்: நிர்வாகிகளுக்கு செலவு வைக்காத அமைச்சர்கள்!

உள்ளாட்சித் தேர்தல்: நிர்வாகிகளுக்கு செலவு வைக்காத அமைச்சர்கள்!

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி மாவட்டம் தோறும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று தலைமை அறிவித்ததும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான பேர் விருப்பமனுக்களோடு குவிந்துவருகின்றனர்.

மேயரில் ஆரம்பித்து,மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சித் தலைவர், நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சித் தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் என்று பற்பல பதவிகளுக்கும் விருப்ப மனு கொடுக்க திரள்கிறார்கள் அதிமுகவினர். ஆளுங்கட்சியாக இருப்பதால் உள்ளாட்சியில் பதவிபெற்றால் ஏராளமான நன்மை கிடைக்குமென்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

ஆணா, பெண்ணா, பொதுவா, தனியா என்ற வரையறை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படாத பட்சத்தில் எப்படியாவது பதவி கிடைத்தால் போதும் என்று கருதுகிறார்கள் நிர்வாகிகள். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வேலுமணி, கரூர் மாவட்டத்தில் விஜயபாஸ்கர், தஞ்சை மாவட்டத்தில் துரைக்கண்ணு ஆகிய அமைச்சர்கள் தங்களிடம் விருப்பமனு கொடுக்க வரும் நிர்வாகிகளை தனியாக அழைத்து,

‘இந்த சீட் இன்னாருக்குனு முடிவு பண்ணியாச்சுப்பா. அதனால வேஸ்டா பணம் கட்டாதீங்க. பின்ன பதவி இன்னொருத்தருக்குனு ஆனபிறகு வருத்தப்படாதீங்க. உள்ளாட்சித் தேர்தல்ல கடுமையா பாடுபடுங்க. இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதனால பாத்துக்கலாம்” என்று கூல் செய்து அனுப்பி வருகிறார்கள்.

ஏற்கனவே கான்ட்ராக்ட் பணிகள் மூலம் வருமானம் கிடைத்துவரும் நிலையில் அமைச்சர்களின் இந்த விளக்கத்தை ஏற்று பல நிர்வாகிகள், ‘இப்பவே சொன்னாங்களே... விருப்பமனுவை வாங்கி அவங்க வச்சுகிட்டா, நமக்குதான் பதவி கிடைக்கும்னு நம்பி இன்னும் கூடுதல் செலவு பண்ணிக்கிட்டிருப்போம். நல்ல வேளை இப்பவே சொல்லி மிச்சப்படுத்திட்டாங்க” என்ற மனநிலையில் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.

மற்ற மாவட்டங்களில் எப்படியோ, இந்த மாவட்டங்களில் இன்னார்தான் வேட்பாளர் என்று ரகசியமாக சொல்லிவிடுகிறார்கள் இந்த மூன்று அமைச்சர்களும்.

ஞாயிறு, 17 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon