மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

அமிதாப்புக்கு எதிராக நோட்டீஸ்!

அமிதாப்புக்கு எதிராக நோட்டீஸ்!

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஜூண்ட் என்ற புதிய படத்தில் நடித்து வரும் நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் நந்தி சின்ன குமார் இப்படம் தொடர்பாக அமிதாப் பச்சனுக்கு பதிப்புரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

அமிதாப் பச்சனுக்கு மட்டுமல்ல, ஜுண்ட் இயக்குனரும் தயாரிப்பாளருமான நாகராஜ் மஞ்சுலே, தயாரிப்பாளர் கிருஷன் குமார், டி-சீரிஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பூஷன் குமார், மற்றும் சேரி கால்பந்து நிறுவனர் விஜய் பார்ஸ் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்தப்படத்தில் அமிதாப் கால்பந்து கோச் ஆக நடித்திருக்கிறார். நாக்பூரின் சேரி பகுதியைச் சேர்ந்த கால்பந்து வீரர் அகிலேஷ் பாலின் வாழ்க்கையைப் பற்றி ஸ்லம் சாக்கர் என்ற பன்மொழி திரைப்படத்தை எழுதி இயக்க குமார் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஜூன் 11, 2018 அன்று தெலுங்கானா சினிமா ரைட்டர்ஸ் அசோசியேஷனில் கதை மற்றும் ஸ்கிரிப்டை பதிவு செய்ததாகவும், ஆனால் ஜுண்ட் திரைப்படம் அகிலேஷின் கதையை ஒரு முக்கிய பாத்திரத்தில் காட்டுகிறது, இதனால் பதிப்புரிமை மீறப்படுவதாக நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜுண்டின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சவிதா ராஜ், செப்டம்பர் 2019 இல் அகிலேஷ் பாலின் பதிப்புரிமை தங்களிடம் இருப்பதாக கூறி அச்சுறுத்தியதாகவும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர் குற்றம் சாட்டினார். பதிப்புரிமை மீறல் மற்றும் குற்றவியல் மிரட்டல்களை அம்பலப்படுத்தி அமிதாப் பச்சனுக்கும் நாகராஜ் மற்றும் ஜுண்ட் தயாரிப்பாளர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியும் எந்த பதிலுமில்லை என்று கூறுகிறார் நந்தி சின்ன குமார்.

இந்திய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் (ஐ.எம்.பி.பி.ஏ) மற்றும் தெலுங்கானா சினிமா எழுத்தாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கும் கடிதம் எழுதியுள்ள அவர், ஜுண்ட் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டாம் என்று மத்திய திரைப்பட தணிக்கைச் சான்றிதழ் வாரியத்திற்கும் கடிதமெழுதியுள்ளார்.

ஞாயிறு, 17 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon