நாற்பது ஆண்டுகளில் இல்லாத தனி நபர் செலவுச் சரிவு- அறிக்கை அதிர்ச்சி!

public

இந்தியர்களின் மாதச் செலவினம் கடந்த நாற்பது ஆண்டுகளிலேயே 2017-18 இல்தான் மிகவும் குறைந்த அளவை எட்டியிருப்பதாக மத்திய அரசின் புள்ளியல் துறை மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

சமீபத்திய நுகர்வோர் செலவின கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் வீட்டு நுகர்வோர் செலவு பற்றி மத்திய அரசின் புள்ளியல் துறையின் கீழ் வரும் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) ஆய்வு நடத்தியது. இதில் மிக அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்திருப்பதால், அந்த அறிக்கையை வெளியிடுவதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக , ‘பிசினஸ் ஸ்டேண்டர்டு’ இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. இதைப் பின்பற்றி மற்ற ஆங்கில ஊடகங்களும் இதுபற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன.

2011-12 ஆம் ஆண்டின் நுகர்வோர் செலவினங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் சராசரி நுகர்வோர் செலவினம் 2017-18 ஆம் ஆண்டில் 3.7 சதவிகிதம் குறைந்துள்ளது. இதில் மிகவும் கவலைக்குரிய போக்கு என்னவென்றால், கிராமப்புற இந்தியாவில் உணவுக்காக செலவிடும் தொகையானது 10 சதவிகிதம் குறைந்துள்ளது, இது நாட்டில் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிக்கிறது என்கிறார்கள் பொருளாதார, சமூக ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வை தேசிய புள்ளியியல் நிறுவனம் ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை நடத்தியது. 2019 ஜூன் 19 ஆம் தேதி ஒரு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த அறிக்கை வெளியிடப்படவே இல்லை.

அந்த அறிக்கையின்படி , 2011-12 ஆம் ஆண்டில், ஒரு இந்தியர் செலவழித்த சராசரி தொகை ரூ.1,501 என்று என்எஸ்ஓ கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. ஆனால் 2017-18 வாக்கில் இந்த தொகை ரூ .1,446 ஆக குறைந்துவிட்டது. ஆறு வருடங்களுக்கு முன்னர் செலவழித்த தொகையை விட இப்போது கட்டாயமாக அதிக செலவாக வேண்டும். ஆனால் ஆறு வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட குறைந்திருக்கிறது என்பதே அதிர்ச்சியளிக்கிறது.

இந்த காலகட்டத்தில் கிராமங்களில் நுகர்வோர் செலவினம் 8.8 சதவிகிதம் குறைந்துள்ளதால் கிராமப்புற இந்தியாவில் சரிவு வெளிப்படுகிறது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. கிராமப்புற இந்தியாவுடன் ஒப்பிடுகையில், நகர்ப்புற மையங்கள் நுகர்வோர் செலவினங்களில் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2017-18 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் உணவுக்கான சராசரி மாத செலவு 580 ரூபாய் என்று இருந்தது. 2011-12 ஆம் ஆண்டில், இந்த தொகை ரூ .643 ஆக இருந்தது, இது கிட்டத்தட்ட 10 சதவிகிதம் சரிவைக் குறிக்கிறது.

நகர்ப்புறங்களில், மாதாந்திர உணவுச் செலவு 2011-12 ஆம் ஆண்டில் ரூ 944 ஆக இருந்து, 2017-18 ஆம் ஆண்டில் ரூ 946 ஆக உயர்ந்துள்ளது.

1972-73 க்குப் பிறகு நுகர்வோர் செலவினங்கள் உண்மையான அளவில் குறைந்து வருவது இதுவே முதல் முறை என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தின் இணை பேராசிரியர் ஹிமான்ஷு தெரிவித்துள்ளார். 1972-73 ஆம் ஆண்டில், உலகளாவிய எண்ணெய் நெருக்கடி காரணமாக இந்த சரிவு ஏற்பட்டது. அதற்கு முன்னர், 1960 களின் நடுப்பகுதியில், உள்நாட்டு உணவு நெருக்கடி காரணமாக நுகர்வு குறைந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *