rநடிகனுக்குத் தேவை கட்-அவுட்டா, ஹெல்மெட்டா?

public

-சிவா

சினிமாவும் பைக்கும் பிரிக்க முடியாத விஷயங்கள். பைக் ஸ்டண்ட் செய்வது, அதன்மூலம் ரசிகர்களின் கைதட்டலைப் பெறுவது, அதை வைத்து பணம் பார்ப்பது என்பதெல்லாம் சிறப்பாக நடைபெற்று வந்தன தமிழ் சினிமாவில். நடிகர்களுக்குப் பிடித்த பைக் என பத்து நடிகர்களின் லிஸ்ட் எடுத்து வெளியிட்டால் பட்டாசு போல நாளிதழ் விற்பனையாகும் காலமும், சேனலுக்கு வியூவர்ஸ் வரும் காலமும் மலையேறிவிட்டது. ஆனால், இப்போதும் பைக்கில் ஸ்டண்ட் செய்வதையும், அதை வைத்து ரசிகர்களை பரவசமடையச் செய்வதையும் நடிகர்களும் கைவிடுவதில்லை; இயக்குநர்களும் அதை காசாக மாற்றாமல் இருப்பதில்லை.

விஜய்யின் பிகில் படத்தில் பைக் ஓட்டும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஹை-ஸ்பீடில், ஹைவேஸ் ரோட்டில் அவர் வண்டி ஓட்டும் காட்சி ஒன்று இடம்பெற்றது. “போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து 5 நிமிஷத்துல ஸ்டேடியத்துக்கு போகத் தெரிஞ்ச பிகிலுக்கு, ரயில்வே ஸ்டேஷன்ல கண்ணு முன்னாடி அப்பனை வெட்டும்போது ஸ்லோமோஷன்ல 10 நிமிஷமா போய்கிட்டு இருந்தாரே’ என்று கலாய்த்தனர். ஆனால், இதை அப்படி அணுகுவது தவறு. எத்தனை எமெர்ஜன்சியாக இருந்தாலும் ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்லவேண்டும் என்பது சட்டம் என்று சொன்னால், ஒரு நல்லது செய்யவேண்டும் என்பதற்காக சட்டத்தை மீறுவது தவறில்லையே என்கின்றனர்.

மூன்று நாட்களாக சென்னை பைபாஸ் சாலையில் நடைபெற்ற ஷூட்டிங்கில் ஒரு ஹெல்மெட் வாங்கிப்போடுவதால் என்ன பிரச்சினை ஏற்பட்டுவிடப்போகிறது. ஆயிரம் ரூபாய் பணம் இல்லாமலா பிகில் ஷூட்டிங்கை நடத்தினார்கள். படம் முழுக்க பார்க்கும் விஜய்யின் முகத்தை, பைக் ஓட்டும்போது ஹெல்மெட்டினால் மறைப்பதால் யாருடைய குடியும் முழுகி விடாதல்லவா? என்று கேட்டால், படத்தை படமாக பார்க்கவேண்டும் என்கிறார்கள். சரி படமாகவே பார்ப்போம்.

மைக்கேல் வேண்டுமென்றே ஹெல்மெட் அணியவில்லையா?

கைது செய்து சிறை வைக்கப்பட்ட அந்தக் காட்சியில், மைக்கேலின் செயல்கள் அசாத்தியமானவை. ஆப்பிள் வாட்ச் மூலமாக, ஸ்டேஷனில் நடப்பவற்றை தன் ஆட்களிடம் சொல்லி, டெல்லியில் முதல்வரின் பேட்ரோலை வழிமறிப்பார். ஸ்டேஷனுக்கு வெளியில் நிற்கும் காருக்கு பாம் வைப்பார். இதையெல்லாம் செய்துவிட்டு அங்கிருந்து ஸ்டேடியம் செல்வதற்கு அதிவேகமான பைக் ஒன்றை தயார் செய்துவைக்கச் சொல்வார். இவ்வளவையும் செய்தவருக்கு ஒரு ஹெல்மெட் வாங்கி வைங்க என்று சொல்ல ஏன் மனம் வரவில்லை. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம்.

நீங்களே யோசித்துப் பாருங்கள். ஒருவேளை போகும் வழியில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்று, மைக்கேல் நேரத்துக்கு ஸ்டேடியம் செல்லமுடியாமல் போயிருந்தால், கட்டுக்கோப்பாக விளையாடவேண்டிய போட்டியில் நடுவரை இடித்துத் தள்ளச்சொல்லி பாண்டியம்மாவுக்கு ஐடியா கொடுத்திருக்க முடியுமா? இல்லை, சிசர் கிக் ஷாட் அடிக்கச் சொல்லி தென்றலுக்கு ஐடியா கொடுத்திருக்க முடியுமா? இப்போது கூட, ஸ்டேடியத்தில் ரசிகர்கள் கத்தும் ஒலியைத் தாண்டி, கிட்டத்தட்ட 50 மீட்டருக்கு அப்பால் நிற்கும் பயிற்சியாளர் ‘வேம்பு’ என அழைப்பது எப்படி வேம்புவின் காதில் விழுந்தது என்றெல்லாம் கேட்கவில்லை. மைக்கேலுக்கு ஏதாவது நடந்திருந்தால், யார் இதையெல்லாம் செய்திருப்பது என்று கேட்கவேண்டியது கடமை. சர்கார் படத்தில் முருகதாஸ் இயக்கும்போது ஹெல்மெட் அணிந்தவருக்கு, அட்லீ இயக்கத்தில் நடிக்கும்போது ஹெல்மெட் அணியவேண்டும் எனத் தெரியவில்லையா? அட்லீ ஹெல்மெட் அணியக்கூடாது என வற்புறுத்தி சொன்னாரா? என எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன.

காரணம், இது ஒரு நடிகருடன் நின்று விடுவதில்லை. ரசிகனுக்காவது ஒரு நடிகன் செய்வதை ரசித்துவிட்டுக் கடந்து செல்வதுடன் முடிந்து விடுகிறது. ஆனால், ஒரு நடிகனை ஓவர்டேக் செய்து முன்னிலை பெறவேண்டும் எனத் துடிக்கும் இன்னொரு நடிகர் அப்படிக் கடந்துவிடுவதில்லை. உதாரணத்துக்கு, விஷாலின் ஆக்‌ஷன் படத்தை சொல்லலாம்.

உலகிலுள்ள அத்தனை சிறந்த ஆக்‌ஷன் காட்சிகளையும் வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் போல. அந்தப் படத்தின் டிரெய்லரிலும் ஹெல்மெட் அணியாமலேயே விஷால் பைக் ஓட்டுகிறார். வளர்ந்த நாடுகளில், ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டினாலே துரத்திக்கொண்டு வந்து சுளுக்கெடுப்பார்கள். ஆனால், இவரோ பைக்கிலேயே சண்டை போடுகிறார். இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. முந்தய படத்தில் காரின் பேனட் மீது உட்கார்ந்துகொண்டு பறந்து வந்தாரே, அப்போதே அதனை கண்டித்திருந்தால் இப்படி நடைபெறாது.

நடிகர் அஜித் எல்லா படங்களிலும் ஹெல்மெட் அணிந்தே வண்டி ஓட்டுவார் என்று அவரைப் புகழ்வதுண்டு. ஆனால், அவரும் கூட, இயக்குநர்களின் ‘மாஸ்’ சீன் என்ற வலைக்குள் சிக்கிவிட்டது தான் வருத்தமானது. நேர்கொண்ட பார்வை படத்தில், பைக்கில் ஹெல்மெட் அணிந்துகொண்டு சென்றாலும், வண்டியின் பின்னே ஒரு இரும்பு கம்பியை வைத்து நெருப்பைப் பறக்கவிட்டுக்கொண்டு செல்வார். இரும்புக் கம்பியிலிருந்து வரும் நெருப்பால், அந்த காட்சி எப்படி மெருகேறுகிறது என்பது புரியவே இல்லை. இதேபோல நெருப்பை உருவாக்க, மெரினாவிலுள்ள காமராஜர் சாலையில் போலீஸ் பேரிகார்டுகளை இழுத்துக்கொண்டு சென்றார்களே இளைஞர்கள். அவர்கள் இதைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள். அப்போது அவர்களை திட்டிய அஜித் ரசிகர்கள், இந்த காட்சியைப் பார்த்து வெட்கப்பட மாட்டார்களா?

ஹெல்மெட் அவசியம் என்று அரசாங்கம் சொல்வதன் நோக்கம் ‘மாமூல்’ அதிகப்படுத்துவதற்கு என பொதுமக்களிடம் ஒரு எண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் இந்த கட்டுப்பாட்டினால், ஏதோ ஒரு இடத்தில் ஒரு உயிர் காப்பாற்றப்படும் என்றால், இந்த சட்டத்தைப் பின்பற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகிறது. ‘எல்லா பிரச்சினையிலும் ஒரு உயிர் போன பிறகு தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?’ என்று நீதிபதிகள் கேள்வி கேட்கும்போது, ‘சூப்பர் சார்’ என்று சொல்கிறோம் என்றால், அந்த ஒரு உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு குடிமக்கள் கட்டுப்படவேண்டியதும் அவசியம். நடிகனுக்கு மட்டும் எந்த சட்டத்திலிருந்தும் விலக்கு கொடுக்கமுடியாது. புகைப்பிடிப்பது குற்றம் என்றால், அதை செய்யும் காட்சியில் ‘புகைப்பிடிப்பது குற்றம்’ என்ற அறிவிப்பு வெளியாகவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஹெல்மெட் கட்டாயம் அணிவது சட்டம் என்றால், அப்படி ஹெல்மெட் இல்லாத காட்சிகளில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என ஒரு ஸ்லைட் சேர்க்கவேண்டியதும் அவசியம். அதற்கு பதில் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஹெல்மெட் வாங்கிவிடலாம். இதெல்லாம் வேண்டாம். உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள், அவர்கள் வாங்கிக்கொடுப்பார்கள்.

நடிகன் என்பவர் குறைந்தபட்ச பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அந்தப் பொறுப்புணர்வு தங்களுக்கு இருப்பதாகவும், அப்படிப்பட்ட பொறுப்புணர்வில் தங்களுடைய ரசிகர்களை தாங்கள் வழிநடத்துவதாகவும் ஒரு தோற்றத்தை எல்லா நடிகர்களும் உருவாக்குகின்றனர். ஆளுக்கொரு ‘நல’ இயக்கங்களைத் தொடங்கி அந்த ரசிகர்களின் கார்டியன்கள் போல தங்களைக் காட்டிக்கொள்கின்றனர். இப்படியெல்லாம் நீங்கள் இருக்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், அப்படிப்பட்ட நிலைக்கு வந்தபின், அவர்களைப் பின் தொடரும் இளைஞர்களை தவறாக வழிநடத்தக்கூடிய செயல்களை செய்வது ஏன்? இந்தக் கேள்வியைக் கேட்க எல்லோருக்கும் உரிமை உண்டு. முக்கியமாக ஒவ்வொரு நடிகனின் ரசிகனும் இந்தக் கேள்வியைக் கேட்கத் தொடங்கவேண்டும். காரணம், நீங்கள் கொண்டாடும் அந்த நடிகன், தன் குழந்தைகளுடன் பள்ளிக்கோ அல்லது சுற்றுலாவோ செல்லும்போது ஹெல்மெட் அணியாமலோ, தீப்பொறிகளை பறக்கவிட்டுக்கொண்டோ, பைக்கில் வீலிங் செய்துகொண்டோ செல்வதில்லை.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *