மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக திட்டம்: ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக திட்டம்: ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காகவே அதிமுக அரசு திட்டமிட்டு கவனம் செலுத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவரும் முன்னரே திமுகவும், அதிமுகவும் மாவட்ட அளவில் விருப்ப மனு வாங்கும் பணியைத் துவங்கிவிட்டன. ஆணா, பெண்ணா , பொதுவா, தனியா என்ற வரையறை முழுமையாக செய்யப்படாத நிலையிலேயே விருப்ப மனுக்களை கட்சியினரும் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 15) தனது தொகுதியான கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

“உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்ற திட்டத்தோடுதான் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே தேர்தல் அறிவித்தபோதும் எந்த ஒதுக்கீடும் அறிவிக்கப்படாத நிலை இருந்தது. தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றுதான் உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்குப் போட்டார். தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை கிடையாது. ஒதுக்கீடுகளை முறையாக செய்து தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தேர்தலை நடத்த மாட்டார்கள். அவர்களுக்கு தோல்வி பயம். அண்மையில் புதியதாக 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் ஓட்டு பெறக் கூடிய மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், 5 ஆயிரம் ஓட்டுகள் பெறக் கூடிய ஒன்றிய ஊராட்சித் தலைவர்களை எப்படி தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்ற சந்தேகத்தை நாங்கள் கேட்டோம். ஏற்கனவே உயர் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல் படி நடத்தப்படுகிறதா என்றும் தேர்தல் ஆணையரை சந்தித்து திமுக சார்பில் நாங்கள் கேட்டோம்.

தேர்தலை நிறுத்தவேண்டும் என்று ஒருபோதும் திமுக கேட்கவில்லை. அதிமுகதான் திட்டமிட்டு உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க கவனம் செலுத்துகிறது என்பதுதான் எங்கள் சந்தேகம்” என்று கூறினார் ஸ்டாலின்.

வெள்ளி, 15 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon