மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பாஸ்போர்ட் விதி: அரசுக்கு உத்தரவு!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பாஸ்போர்ட் விதி: அரசுக்கு உத்தரவு!

மூன்றாம் பாலினத்தவர்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் கேட்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது மருத்துவமனையில் வழங்கப்படும் சான்றிதழ்களை பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று 1993 பாஸ்போர்ட் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் திருநங்கைகள், திருநம்பிகள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்றிதழ்களைக் கேட்பது சட்ட விரோதமானது என்று தெரிவித்துள்ளார். ஒருவர் தன்னுடைய பாலின அடையாளத்தைத் தெரிவிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனு நேற்று (நவம்பர் 13) நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக டிசம்பர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon