மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

ரஃபேல் வழக்கில் விசாரணை கதவு திறந்துள்ளது: காங்கிரஸ்!

ரஃபேல் வழக்கில் விசாரணை கதவு திறந்துள்ளது: காங்கிரஸ்!

ரஃபேல் ஊழல் வழக்கின் மீளாய்வு மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு விசாரணைக்கு வழிவகுத்துள்ளதாகவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணையை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்த வழக்கில், எந்த முறைகேடும் நடக்கவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட மீளாய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில், “ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு ஒன்றுமில்லாமல் போனது. மக்களைத் தவறாக வழிநடத்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இவரைப் போன்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ரஃபேல் போர் விமானம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது, மீண்டும் விசாரணைக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார், அதாவது, “ரஃபேல் ஊழல் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஒரு கதவைத் திறந்துள்ளார். இந்த ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் (ஜேபிசி) அமைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ”தீர்ப்பின் விவரங்களை முழுவதுமாக தெரிந்துகொள்ளாமல் கொண்டாடும் பழக்கம் பாஜகவுக்கு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணைக்கு வழி வகுத்துள்ளது. 14 டிசம்பர் 2018 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு அல்லது இன்றைய தீர்ப்பு சிபிஐ எதிர்காலத்தில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுப்பதில் தடையாக இருக்காது என்று கூறியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் ”தீர்ப்பின் பத்தி 73 மற்றும் 86 இல் குறிப்பிடப்பட்டுள்ள படி சிபிஐ அல்லது வேறு எந்த புலனாய்வு அமைப்புகளும் எதிர்காலத்தில் விசாரணை நடத்த முடியும்” என்று சுர்ஜேவாலா கூறியுள்ளார். அதாவது ஆதாரம் கிடைத்தால் இதுகுறித்து எதிர்காலத்தில் சிபிஐ விசாரிக்கலாம் என்று தீர்ப்பு குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகிறது.

வியாழன், 14 நவ 2019

அடுத்ததுchevronRight icon