மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

ஐஐடி மாணவி வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

ஐஐடி மாணவி வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மத ரீதியிலான துன்புறுத்தல்களைத் தனது மகள் சந்தித்து வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டும் நிலையில், அதனடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் மாணவி தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர்கள் சுதர்சன பத்மநாபன், ஹேமச்சந்திரன் காரா மற்றும் மிலிந்த் பிரம்மே ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இதில் பேராசிரியர் மிலிந்த் பிரம்மே அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் ஆலோசகராக உள்ளார்.

இந்நிலையில், மாணவியின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஐஐடிக்கு சென்ற சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாணவி தங்கியிருந்த விடுதி அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின்னர் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இன்று மதியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ”மாணவி உயிரிழந்த இடத்தைச் சென்று பார்த்தேன். உண்மையை அறிந்துகொள்வதற்கு பலரிடம் விசாரணை நடத்தினேன். இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது. விசாரணைக் குழுவில் ஒரு பெண் அதிகாரி உள்பட, சிபிஐயில் பணிபுரிந்த இரண்டு உயரதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாணவியின் இறப்பு குறித்து வெளிப்படைத் தன்மையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ”மதவெறிச் செயல்கள் தலைவிரித்தாடும் நிலையில், தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி சென்னை ஐஐடியில் சேர்த்ததாகவும் அப்படி இருந்தும் தன் மகளைச் சிறுமைப்படுத்தி, மன உளைச்சலுக்கு உட்படுத்தி உயிர்பலிக்கு ஆளாக்கிவிட்டதாக மாணவியின் தாயார் தெரிவித்திருப்பது தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், கல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து இந்தியத் தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களை போலச் சமமான உரிமையுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் மேம்பட ஆவண செய்யவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் இத்தகைய மாணவர் தற்கொலைகளைத் தடுக்க உரியச் செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும். மன அழுத்தங்களையும், சவால்களையும் மாணவச் செல்வங்கள் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு படிப்பதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் உட்படப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், இவ்வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon