மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

ரூ.2,081 கோடி வாடகை பாக்கியைக் குறைக்க பேரம்: ஸ்டாலின்

ரூ.2,081 கோடி வாடகை பாக்கியைக் குறைக்க பேரம்: ஸ்டாலின்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அளிக்க வேண்டிய வாடகை பாக்கியை அரசு குறைக்க முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள 17 ஏக்கர் தமிழக அரசு நிலத்தை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், சென்னை கிரிக்கெட் மன்றமும் குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வருகின்றன. 1995ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் 20 வருடத்துக்கு மீண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது, முதல் ஐந்து வருடத்துக்கு ஆண்டுக்கு 50,000 குத்தகை தொகையாகவும், அதன் பிறகு அன்றைய சந்தை மதிப்பில் குத்தகை தொகை வழங்குவது மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான சிஏஜி அறிக்கையில், 2000-2016ஆம் ஆண்டு வரை ரூ.2,081 கோடியை மைதானத்தின் குத்தகை பாக்கியாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல், ரூ.250 கோடியாக குறைக்கும் 'பேரம்' நடப்பதாக செய்தி. அமைச்சரவை அப்படி முடிவு எடுத்திருந்தால், அதற்கான அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மக்கள் நலத் திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை எனும் நேரத்தில், இதுபோன்ற வாடகை பாக்கியைக் குறைக்கும் நடவடிக்கை யார் லாபத்திற்காக? 'கமிஷன், கரப்ஷன், கலக்‌ஷன், பேரம்' - இதுதவிர அதிமுக ஆட்சிக்கு வேறேதுமே தெரியாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதன், 13 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon