மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

சிறப்பு செய்தி: நிறுவனப் படுகொலைகளுக்கு கிடைக்குமா நீதி?

சிறப்பு செய்தி: நிறுவனப் படுகொலைகளுக்கு கிடைக்குமா நீதி?

இந்தியாவின் தலைச்சிறந்த கல்வி நிறுவனங்கள் என்று புகழப்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் நடக்கும் நிறுவனப் படுகொலைகளைப் பற்றிய செய்திகளை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ மனசுக்குள் ஒரு விதமான பயம் தொற்றி விடுகிறது. அந்நிறுவனங்களில் நம் பிள்ளைகள், அவர்கள் சொல்லும் அனைத்துத் தகுதிகள் பெற்று இருந்தாலும், படிக்க இடம் கிடைத்தாலும் நம் பிள்ளைகள் முழுமையாகப் படித்து முடித்து பட்டம் பெற்று வீடு திரும்புவார்களா என்ற சந்தேகமே அதிகம் வருகிறது.

2014க்கு முன் நிறுவனப் படுகொலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும், 2014 க்குப் பிறகு நிறுவனப் படுகொலைகள் அதிகமாக இருக்கிறது. நிறுவனப் படுகொலைகளுக்கு உள்ளாகி இருப்பவர்கள் எல்லோரும் உயர்சாதி சமூகத்தைச் சேராதவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், முஸ்லீம் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தான் நிறுவனப் படுகொலையின் இலக்காக இருக்கிறார்கள்.

நிறுவனப் படுகொலை செய்யப்பட்டவர்களின் வரலாறு

ரஞ்சனி எஸ்.ஆனந்த்

2004 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ரஞ்சனி. எஸ். ஆனந்த் என்பவர் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்துக் கொண்டிருந்த ஆதிதிராவிட மாணவி. அவரின் தந்தை சலவைத் தொழிலாளி. கல்லூரி படிப்புக்கும், விடுதிக்கும் கட்டணம் செலுத்த கல்விக் கடன் மறுக்கப் பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் நுழைவுத் தேர்வு ஆணையத்தின் 7வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை மேற்கொண்டார்.

செந்தில்குமார்

2008 ஆம் ஆண்டு சேலம் ஜலகண்டபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தார். ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் அவருக்கு நிகழ்ந்த சாதிய ஒடுக்குமுறையால் பாதிப்புக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார்.

வெங்கடேஷ்

2013 ஆம் ஆண்டு ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ரெங்காரெட்டி லிங்கம்பள்ளியை சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர் எம் வெங்கடேஷ், தான் ஆதிதிராவிடர் என்பதால் தனக்கு ஆய்வு நெறிஞரை ஒதுக்காமல் காலம் தாழ்த்திய காரணத்தினால் மனம் உடைந்து விஷம் குடித்துத் தற்கொலை செய்துக் கொண்டார்.

ரோகித் வெமுலா

2016 ஆம் ஆண்டு ஆய்வு ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதால் போராட்டத்தை தொடங்கினார் ரோகித் வெமுலா. சாதிய பாகுப்பாடினால் அவருக்கான நியாயம் கிடைக்கவில்லை. நியாயம் கிடைக்காததினால் மனம் உடைந்து பல்கலைக்கழக வளாகத்திலேயே தற்கொலை செய்துக் கொண்டார் ரோகித் வெமுலா

சரவணன்

2016 ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொது மருத்துவம் படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரவணனுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டிருக்கிறார். முதலில் தற்கொலை செய்துக்க கொண்டார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் உடற்கூராய்வில் தற்கொலைக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முத்துகிருஷ்ணன்

2017 ஆம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த ஜே முத்து கிருஷ்ணன் டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பினை மேற்கொண்டு வந்தார். சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானதால் தற்கொலை செய்துக்க கொண்டார் என்கிறது செய்தி குறிப்புகள்

பயல் தாட்வி

2019 ஆம் ஆண்டு டொப்பிவாளா தேசிய மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்து வந்த மருத்துவர் பயல் தாட்வி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் . சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டதால் மனம் உடைந்த மருத்துவர் பயல் தற்கொலை செய்து கொண்டார்.

பாத்திமா லத்தீப்

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை ஐஐடி வளாகத்தில் மதத்தின் பெயரால் பாகுப்பாடு காட்டி துன்புறுத்தியதால் கேரளாவைச் சேர்ந்த மானுடவியல் மாணவி பாத்திமா லத்திப் தற்கொலைச் செய்துக் கொண்டார்.

பட்டியலில் விடுபட்டவர்கள் இன்னும் பலர் இருக்கலாம். குறைந்தபட்சமாக பட்டியலிடப் பட்டவர்களுக்கு கிடைத்த நீதி தான் என்ன? கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிறுவனப் படுகொலைகளுக்கு அடிப்படையாக இருப்பது சாதிய நிறுவனமும், மத நிறுவனமும் தான். அதற்கு என்ன தண்டனை அல்லது அதை ஒழிக்க வழி என்ன?

நிறுவனப் படுகொலை செய்யப்பட்டவர்களின் வெற்றிடத்தை கல்விநிலையங்களில் நிரப்பியவர்கள். யார்? யாருக்காக, எதுக்காக நடத்தப் படுகிறது இந்த நிறுவனப் படுகொலைகள்?

சகுனி

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon