மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

50-50 ஃபார்முலா’ மோடிக்கு தெரியாதா? சிவசேனா கேள்வி!

50-50 ஃபார்முலா’ மோடிக்கு தெரியாதா? சிவசேனா கேள்வி!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு அளிப்பது குறித்து, பிரதமர் மோடிக்கு அமித் ஷா தகவல் தெரிவித்தாரா? அவ்வாறு தெரிவித்திருந்தால், இந்த அளவுக்கு மாநிலத்தில் சூழல் மோசமடைந்திருக்காது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் விரிசல் ஏற்பட்டதும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் கிடைக்காததால் சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அதன் பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்த போதும், அந்த கட்சியாலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் கடிதத்தை ஆளுநரிடம் அளிக்க இயலவில்லை.

இதனால், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, செவ்வாய் கிழமை(நவம்பர் 12) மாலை மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அமித் ஷா பேச்சுக்கு சஞ்சய் ராவத் பதில்

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று(நவம்பர் 13) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், சிவசேனா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதில், முதல்வர் பதவி கேட்டு சிவசேனா வைக்கும் புதிய கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத்திடம், அமித் ஷா அளித்த பேட்டி குறித்து செய்தியாளர்கள் இன்று(நவம்பர் 14) கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராவத், “பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே நடந்த உடன்பாடு தனிப்பட்ட முறையில் நடந்தது. தேவேந்திர பட்னாவிஸ்தான் அடுத்த முதல்வர் என்று பிரதமர் பலமுறை பொது மேடையில் பேசியதை நாங்கள் கேட்டு இருக்கிறோம். அதை எங்களுக்கான அரசியல் செய்தியாக பார்க்காததால் அதை எதிர்க்கவில்லை.

அதுபோல சிவசேனாவும் இதேபோன்ற கருத்தைக் கூறியதும் நினைவிருக்கட்டும். ஆனால், அவ்வாறு உறுதியளிக்கவில்லை என்று பாஜக தொடர்ந்து கூறுவது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை பொய்யர் என்று சித்தரிப்பது போன்று இருக்கிறது. உத்தவ் தாக்கரேவுடன் சேர்ந்து செய்து கொண்ட உடன்பாடான ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு அளிப்பது குறித்து, பிரதமர் மோடிக்கு அமித் ஷா தகவல் தெரிவித்தாரா? அவ்வாறு தெரிவித்திருந்தால், இந்த அளவுக்கு மாநிலத்தில் சூழல் மோசமடைந்திருக்காது.

பாஜக-சிவசேனா இடையே தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக மூத்த தலைவர்கள் பேச்சு நடத்தியபோது, பிரதமர் மோடியை ஒதுக்கிவைத்துதான் முடிவு எடுத்தார்களா என்பது வியப்பாக இருக்கிறது. புரிந்துணர்வில் சிக்கல் இருந்தால் மறுத்து இருக்கலாமே, தேர்தல் முடிவு வெளிவரும் வரை ஏன் அமித் ஷா மவுனமாக இருந்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மாதோஸ்ரீ இல்லத்தில் உத்தவ் தாக்கரேவை, அமித் ஷா சந்தித்தார். அப்போது, இருவரும் நாங்கள் கோயிலாகக் கருதும் பால் தாக்கரே வாழ்ந்த அறையில் சென்று இட ஒதுக்கீடு குறித்தும், அதிகாரத்தில் சம பங்கு பகிர்வது குறித்தும் பேசினார்கள். எந்தவிதமான வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று சிலர் பேசுவது எங்களின் கோயிலையும், பால் தாக்கரேவையும், மகாராஷ்டிராவையும் அவமானப்படுத்துவது போலாகும்” எனக் கூறினார்.

மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டதை சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னா-வில், “குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது, மறைமுகமாக பாஜக கரங்களில் இருப்பதுபோன்றதுதான். ஆட்சி அதிகாரத்தை விட்டு இறங்கியவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சியால் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

கபில் சிபில் கண்டனம்

அமித் ஷா நேற்று(நவம்பர் 13) பேசும் போது, “கபில் சிபல் போன்ற ஒரு கற்றறிந்த வழக்கறிஞர், ‘எங்களுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது’, போன்ற குழந்தைத்தனமான வாதங்களை முன்வைக்கிறார்” எனக் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, கபில் சிபில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, "இந்த விஷயங்களைப் பொருத்தவரை அமித் ஷா மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அரசியல் கட்சிகளை எவ்வாறு உடைப்பது மற்றும் எவ்வாறு ஒன்றுபடுத்துவது என்பது அவருக்குத் தெரியும். கோவா, கர்நாடகா என பல மாநிலங்களில் அதனை நாங்கள் பார்த்திருக்கிறோம்” எனக் கூறினார்.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா பேச்சுவார்த்தை

பாஜக அல்லாத அரசாங்கத்தை அமைப்பதற்காக சிவசேனாவுடன் கைகோர்க்க காங்கிரசும் என்சிபியும் முடிவெடுத்த பின்னர், கட்சிகளுக்கு இடையிலான முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன.

பேச்சுவார்த்தையில், அதிகாரப் பகிர்வு குறித்து, கடுமையான பேரத்தை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. மேலும், சிவசேனாவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள், மாநிலக் கட்சித் தலைவர் பாலாசாகேப் தோரத், முன்னாள் முதல்வர் அசோக் சவான் மற்றும் முன்னாள் கட்சித் தலைவர் மணிக்ராவ் தக்ரே உள்ளிட்டவர்கள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

முற்றிலும் மாறுபட்ட கொள்கையுடைய காங்கிரஸ் - சிவசேனா கட்சிகள், கல்வியில் முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான முன்மொழிவு, வீர் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா கோருவது குறித்து பேசியுள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது, "மூன்று கட்சிகளுக்கிடையில் அதிகாரத்தை சமமாக விநியோகிக்க நாங்கள் வலியுறுத்துவோம். இந்த சூழ்நிலையில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, நாங்கள் அனைவரும் சமமாக இருக்கிறோம், நாங்கள் மூவரும் ஒன்றிணைந்தால்தான் அரசாங்கத்தை உருவாக்க முடியும்”என்று கூறினார்.

ஒவ்வொரு கட்சியும் மூன்றில் ஒரு பங்கு அதிகாரப் பகிர்வு ஃபார்முலாவுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் மூன்று நாள் மாரத்தான் மீட்டிங்

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மகாராஷ்டிரா நிலவரம் குறித்து பாஜக கட்சியினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்துள்ளது. இன்று தொடங்கிய இந்தக் கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற 105 பாஜக எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். 164 இடங்களில் போட்டியிட்ட பாஜக 59 இடங்களில் தோற்றுள்ளது. அதனால், தோல்வி அடைந்த இடங்களில் எதனால் பின்னடைவு ஏற்பட்டது என்பதைக் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon