மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

உலகின் மிக கவர்ச்சியான மனிதன் கூறும் ரகசியம்!

உலகின் மிக கவர்ச்சியான மனிதன் கூறும் ரகசியம்!

பீப்பிள் இதழால் 2019ஆம் ஆண்டுக்கான ‘கவர்ச்சியான மனிதன்’ ஆக அமெரிக்கப் பாடகரும் நடிகருமான ஜான் லெஜண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஜான் லெஜண்ட் என அறியப்படும் ஜான் ரோஜர் ஸ்டீபன்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத் திறமைகொண்ட பிரபலமாவார். இவரது முதல் ஆல்பமான கெட் லிஃப்ட்(2004) வைரல் ஹிட்டானதைத் தொடர்ந்து, முன்னணி இசைக் கலைஞர்களுடன் பணியாற்றத் தொடங்கினார். தன்னுடைய மென்மையான குரலுக்காக அறியப்படும் கிராமி விருது வென்ற இந்தப் பாடகர், பீப்பிள் இதழால் இந்தாண்டுக்கான ‘கவர்ச்சியான மனிதன்’ (sexiest man alive) ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதே விருதை 2017ஆம் ஆண்டில் வென்ற பிளேக் ஷெல்டன், லெஜண்டுக்கு இவ்விருதை அறிவித்திருக்கிறார். 40 வயதான இந்த கவர்ச்சியான மனிதன், இதுவரை பத்து முறை கிராமி விருதுகளை வென்றிருக்கிறார். அதே நேரம், மேடை மற்றும் திரையில் தனது பணிக்காக உலகின் முக்கிய விருதுகளாகக் கருதப்படும் எம்மி, கிராமி, ஆஸ்கார் மற்றும் டோனி (EGOT) அந்தஸ்தைப் பெற்ற முதல் கறுப்பினத்தவர் இவர்தான்.

கடந்த ஆண்டு வெற்றியாளராக இருந்த இட்ரிஸ் எல்பா என்ற நடிகரும் கறுப்பினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இட்ரிஸ் எல்பாவுக்குப் பிறகு இந்த மரியாதை சில அழுத்தங்களுடன் தனக்கு வருகிறது என்று வாய்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் லெஜண்ட் கூறினார். விருது வழங்கப்பட்டதை நகைச்சுவையாகக் கூறும் இவர், “நியாயமில்லை, எனக்கு இது நல்லதில்லை!” என்றார்.

பல்வேறு விருதுகளைப் பெற்றாலும், லெஜண்ட் தனது எளிமையால் ஆச்சரியப்படுத்துபவர். இது குறித்துக் கூறும் அவர், “சிறுவயதில் தேவாலயத்திலோ அல்லது பள்ளியிலோ பாட வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம், நான் அமைதியாக இருக்கும்படி என் அம்மா பரிந்துரைப்பார்” என்று அவர் கூறுகிறார். தொழிற்சாலை தொழிலாளியான இவருடைய தந்தையைப் பற்றிக் கூறும் லெஜண்ட், “என் தந்தை எனக்குத் தன்மையைப் பற்றி கற்றுக் கொடுத்தார். அவர் எப்போதும் என்னை மிகவும் கிருபையுடனும் கண்ணியத்துடனும் நடத்தினார்” என்று அவர் கூறினார். மேலும், “எனது பெற்றோர் எனக்குப் பணிவாகவும், கனிவாகவும் இருக்க கற்றுக்கொடுத்தனர்” எனக் குறிப்பிட்டு நெகிழ வைக்கிறார் இந்த பன்முகத் திறமையாளர்.

மேலும், “நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறப் போகிறீர்கள் என்றால், வெற்றியின் ஒரு பகுதி, பணிவை முதன்மையாகக் கொண்டிருப்பதாக இருக்க வேண்டும் எனப் பெற்றோர் எப்போதும் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அதேபோல, நீங்களும் மற்றவர்களை நடத்துங்கள். வாழ்க்கையை வாழ இது ஒரு நல்ல வழியாகும்” என தனது கவர்ச்சிக்கான ரகசியத்தைக் கூறியுள்ளார், உலகின் கவர்ச்சியான மனிதன்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon