மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

நூற்றாண்டு காணும் நூலக மாநாடு!

நூற்றாண்டு காணும் நூலக மாநாடு!

-அரிஅரவேலன்

“நீங்கள் அரசு ஊழியர் அல்லர்; அதனால் இந்திய அரசின் செலவில் இந்திய அரசின் கல்வி ஆணையர் சார்ப் அவர்களால் இலாகூர் நகரில் 1918 சனவரி 4ஆம் நாள் முதல் 8ஆம் நாள் வரை கூட்டப்பட்டிருக்கும் இந்திய நூலகர்கள் மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்ள முடியாது” என்று ஆந்திராவைச் சேர்ந்த இளைஞரிடம் கூறினார் பரோடா நூலகத்தின் இயக்குநர் சனார்த்தன் கூடல்கர்.

அந்த இளைஞர் புன்முறுவல் பூத்தார். “அதனாலென்ன, பொதுநூலக இயக்கத்தில் ஆர்வமும் அக்கறையும் அறிவுமுடையவர்களை அழைத்து அனைத்திந்திய மாநாட்டை நான் கூட்டுகிறேன். நீங்கள் தலைமைவகிக்க வாருங்கள்” என்றார்.

கூடல்கர், “இயலுமா?” என்றார்.

“1919ஆம் ஆண்டு மாநாட்டைக் கூட்டுவோம்” என்று கூறி விடைபெற்றார் அந்த இளைஞர்.

விசயவாடாவிற்குத் திரும்பினார். தான் நிறுவிய ஆந்திர நூலகச் சங்க நண்பர்களோடு கலந்துரையாடினார். அதன் விளைவாக 1919 நவம்பர் 14ஆம் நாள் சென்னை கோகலே மண்டபத்தில் ‘அகில இந்திய பொதுநூலக மாநாடு” என்னும் பெயரில் சனார்த்தன் கூடல்கர் தலைமையில் அந்த இளைஞர் மாநாட்டைக் கூட்டினார். அந்த இளைஞர்தான் அய்யங்கி வேங்கடரமணய்யா.

அந்த மாநாட்டில் பொதுநூலகத்தின் தேவை, அஃது இயங்க வேண்டிய முறை, நூலகர்களும் நூலக ஆர்வலர்களும் ஆண்டுதோறும் ஓரிடத்திற்கூடி தத்தம் பட்டறிவினைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் தேவை ஆகியன பற்றிக் கலந்துரையாடப்பட்டது. அதன் விளைவாக 'இந்திய பொதுநூலகச் சங்கம்' உருவாக்கப்பட்டது. இதுவே அனைத்திந்திய அளவில் உருவான முதல் நூலகச் சங்கம் ஆகும். எனவே, அந்த இந்தியப் பொதுநூலக மாநாட்டிற்கும் இந்தியப் பொதுநூலகச் சங்கத்திற்கும் இன்றைக்கு (நவம்பர் 14) நூற்றாண்டு விழா!

தேசிய நூலக நாளும் நூலக வாரமும்

1933 செப்டம்பர் 13ஆம் நாள் ’இந்திய நூலகச் சங்கம்’ கொல்கத்தா நகரத்தில் உருவாக்கப்பட்டு இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சங்கத்தைச் சார்ந்த நூலகர்கள் சிலர் 1960களின் இடையில் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு நூலகக் கல்வியுலாவாகச் சென்றனர். அங்கே, வானொலியைக் கேட்டும் தொலைக்காட்சியைக் கண்டும் இசைக்கருவிகளை மீட்டியும் பொழுதைக் கழிக்கும் அமெரிக்கர்களுக்கு நூல் உணர்வும் நூலகவுணர்வும் ஊட்ட விரும்பிய அமெரிக்க நூலகச் சங்கம், 1958ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வோராண்டும் ‘நூலக வாரம்’ என்ற நிகழ்வைக் கடைபிடிப்பதனை அறிந்தனர்.

அதேபோல இந்தியாவிலும் நூலக வாரத்தைக் கடைபிடிக்க வேண்டுமென 1968 ஆம் ஆண்டில் கூடிய இந்திய நூலகச் சங்க மாநாட்டில் முடிவுசெய்தனர். அதன்படி 1919 நவம்பர் 14ஆம் நாள் சென்னையில் முதல் பொதுநூலக மாநாட்டின் நினைவாக நவம்பர் 14ஆம் நாளை “தேசிய நூலக நாள்” எனவும் நவம்பர் 14ஆம் நாள் தொடங்கி 20ஆம் நாள் முடிய உள்ள ஒரு வார காலத்தை “தேசிய நூலக வாரம்” எனவும் அறிவிக்கப்பட்டது.

ஏழு வருடங்களாக இல்லாத பொது நூலகத்துறை இயக்குனர்

அதனைத் தொடர்ந்து தேசிய நூலக நாளும் தேசிய நூலக வாரமும் ஆர்வமுடைய நூலகர்களால் அவர்கள் பணியாற்றிய நூலகங்களில் கடைபிடிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் சென்னை கன்னிமாரா நூலகத்தின் அன்றைய நூலகர் வே. தில்லைநாயகம் இதனை ஒரு திருவிழாவைப்போலக் கொண்டாடினார். இராசாசி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி, நூலறிமுக விழா, கவியரங்கம், கருத்தரங்கம், நூல்வெளியீட்டு விழா என்று ஆண்டுதோறும் கொண்டாடி நூலுணர்வையும் நூலகவுணர்வையும் வளர்த்தார். அவர் அத்துறைக்கு இயக்குநராகப் பொறுப்பேற்றதும் தேசிய நூலக வார விழாவை தமிழ்நாடு முழுவதுமுள்ள பொதுநூலகங்களிலும் கொண்டாடச் செய்தார்.

2012 மே 15ஆம் நாள் முதல் நாள் தமிழ்நாட்டரசின் பொதுநூலகத்துறைக்கு முழு நேர இயக்குநர் ஒருவர் நியமிக்கப்படாததால் அத்துறை நலிந்துகொண்டிருக்கிறது; இந்தியப் பொதுநூலக மாநாட்டின் நூற்றாண்டும் யாராலும் கொண்டாடப்படாமலேயே நழுவிப்போய்விட்டது.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon