மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

பாஜகவில் இணைந்த தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள்: இடைத் தேர்தலில் வாய்ப்பு!

பாஜகவில் இணைந்த தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள்: இடைத் தேர்தலில் வாய்ப்பு!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 16 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர்.

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஜூலை மாதம் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி அவர்கள் அனைவரையும் சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், கொறடா உத்தரவை மீறிய 17 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்று உத்தரவிட்டது. அதே சமயம் இவர்கள் இடைத் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் தெரிவித்தது.

17 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆர்.ஆர்.நகர் மற்றும் மஸ்கி தொகுதிகளைத் தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த சூழலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரில் 16 பேர் பெங்களூருவிலுள்ள மாநில பாஜக அலுவலகத்தில் இன்று (நவம்பர் 14) முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இவர்களில் சிவாஜி நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ரோஷன் பெய்க் மட்டும் இன்னும் பாஜகவில் இணையவில்லை. அவர் மீது ஐஎம்ஏ நிதிநிறுவன ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா கூறுகையில், “ரோஷன் பெய்க் பாஜகவில் சேரவில்லை. அதற்கான காரணத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பேட்டியளித்த முதல்வர் எடியூரப்பா, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பாஜகவில் இணைந்து போட்டியிட விரும்பினால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜகவில் இணைந்தவர்களில் 13 பேருக்கு இடைத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலும் மத்திய பாஜக தலைமையின் ஒப்புதலுடன் இன்றே வெளியிடப்பட்டுள்ளது.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon