மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

நெல்லையில் கந்துவட்டி கொடுமை: குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி!

நெல்லையில் கந்துவட்டி கொடுமை: குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி!

கந்து வட்டி கொடுமையால் 2017 அக்டோபர் 23 ஆம் தேதி நெல்லை காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் அவர் உட்பட அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கந்துவட்டிக்கு பணம் கொடுப்பதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆனால் காலப்போக்கில் அவை கண்டு கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக தற்போது நெல்லையில் மீண்டும் ஒரு குடும்பத்தினர் கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகம் முன்பு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதைக் கண்ட அங்கிருந்த காவலர்கள் அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மேளகருங்குளத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ்.(35), இவரது மனைவி மாரியம்மாள் (28). இவர்களுக்கு இசக்கிராஜா, சூர்யபிரகாஷ், தனலட்சுமி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பெயிண்டராக வேலை பார்த்து வரும் அருள்தாஸ் 5 வருடத்துக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம், காலி மனை பத்திரத்தை அடகு வைத்து ரூ.50 ஆயிரம் வட்டிக்குக் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகைக்கு இதுவரை ரூ.2 லட்சம் வரை கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் மேலும் ஒரு லட்சம் கேட்டு அந்த நபர் அருள்தாஸ் வீடு புகுந்து தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த அருள்தாஸ் இன்று (நவம்பர் 14) தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட அங்கிருந்த காவலர்கள் அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து அருள்தாஸ், “வாங்கிய பணத்தை விட அதிகமாக வட்டி கொடுத்துவிட்டேன். இன்று காலை ரூ.50 ஆயிரத்துடன் மேலும் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டினர். கட்டையால் அடித்துத் துன்புறுத்தினர். எனது செல்போனையும் பிடுங்கிக் கொண்டு சென்றனர். மன உளைச்சலால் வேறு வழியின்றி ஆட்சியர் அலுவலகத்துக்கு முறையிட வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தைகள் தினமான இன்று பெற்றோர்கள் தங்களது செல்போன்களை ஒரு மணி நேரம் ஆஃப் செய்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தும் நிலையில், அருள்தாஸ் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon