மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

ஜே.என்.யூ: விவேகானந்தர் சிலை அவமதிப்பு!

ஜே.என்.யூ: விவேகானந்தர் சிலை அவமதிப்பு!

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் சிலையை சுற்றியுள்ள மேடைப்பகுதியில், மர்ம நபர்கள் சிலரால் தகாத வார்த்தைகளால் எழுதியிருந்தது சர்சையானது.

கடந்த இரு வாரத்துக்கும் மேலாக, ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் உணவு விடுதிக் கட்டண உயர்வு, உடைக் கட்டுப்பாடு, விடுதி நிர்வாக அமைப்பின் சில பிரிவுகள் தனியார் வசம் ஒப்படைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்து ஜே.என்.யூ மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த சில தினங்களாக மாணவர்களின் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. நவம்பர் 11ஆம் தேதி, மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கு இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டத்தைக் கலைப்பதற்கு காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். அதனையடுத்து, இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, நேற்று(நவம்பர் 13) மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வித்துறைச் செயலாளர் சுப்ரமணியம், விடுதிக் கட்டண உயர்வு மற்றும் சில கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படுகிறது என அறிவித்தார். இதனையடுத்து மாணவர்கள் மீண்டும் வகுப்புகளுக்குச் செல்லுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் சிலையை சுற்றியுள்ள அடிப்பகுதியில் தகாத வார்த்தைகளால் பெயிண்ட் கொண்டு மர்ம நபர்கள் எழுதியுள்ளனர். அதில் மத்திய அரசை எதிர்த்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த சிலை ஜே.என்.யூ நிர்வாகக் கட்டிடத்தின் வலது பக்கத்தில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேருவின் சிலைக்கு எதிரே அமைந்துள்ளது.

இந்த சம்பவத்தை தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ) கண்டித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர் சன்னி திமான் இது குறித்து கூறுகையில், “இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். ஜே.என்.யூ வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சிலை சேதப்படுத்தப்படவில்லை. அதன் மேடையில் சிலர் எழுதியிருக்கின்றனர். ஜே.என்.யூவின் எந்த மாணவரும் இதைச் செய்திருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இப்போது, நாங்கள் அதை சுத்தம் செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon