மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

சபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்!

சபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்!

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது, ''பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது. இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்களை கவனத்தில் கொண்டோம். எனவே இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம். '' என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வழிபாட்டுத் தலங்களில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் இந்தக் கோயில் தொடர்புடையது மட்டுமல்ல. பெண்களை மசூதிகளில் அனுமதிப்பதையும் உள்ளடக்கியது என்று பெரும்பான்மை தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதியில் முஸ்லீம் பெண்களின் நுழைவு, பார்சி பெண்கள் வழக்கு மற்றும் தாவூதி போஹ்ரா வழக்கு ஆகியவை சபரிமலை வழக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒத்தவை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன் மற்றும் டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் கருத்து வேறுபாடு தெரிவித்துள்ளனர். மற்ற நீதிபதிகள் தீர்ப்புக்கு இணங்குவதில் விருப்பமில்லை என இரு நீதிபதிகளும் தெரிவித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த 2018 செப்டம்பர் மாதம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, “ சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் எந்த வயதுள்ள பெண்களும் சென்று வழிபடத் தடையில்லை” என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து கேரளாவில் பெரும் போராட்டம் வெடித்தது. கேரள அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று சொல்ல, பல இந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.

இதற்கிடையில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக நான்கு புதிய ரிட் மனுக்கள், ஐந்து இடமாற்ற மனுக்கள், 56 மீளாய்வு மனுக்கள் என 65 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது இம்மனுக்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

நாயர் சர்வீஸ் சொசைட்டி, ஐயப்பன் கோயில் தாந்த்ரி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசு ஆகியவை இந்த வழக்குகளில் வாதாடின. புகழ்பெற்ற கோயிலின் மரபுகள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை மீளாய்வு செய்ய வேண்டுமெனப் பல அமைப்புகள் கோரின. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon