மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் சிவகங்கை மாவட்டம் அரசலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மதுரை பிபி குளம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

முன்னதாக மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த தியாசினி என்ற 11 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த நிலையில் டெங்கு பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மதுரையில் டெங்குவால் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 148 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் அர்ஜுன் குமார் தெரிவித்துள்ளார். நோய் பாதிப்பைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon