மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

சந்திராயன் 3: பணியை துவங்கிய இஸ்ரோ!

சந்திராயன் 3: பணியை துவங்கிய இஸ்ரோ!

நவம்பர் 2020-ல் நிலாவில் தரையிறங்க காலக்கெடுவை நிர்ணயித்து சந்திராயன் 3க்கான பணியை இஸ்ரோ துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 7ஆம் தேதி நிலாவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மென்மையான தரையிறக்கத்தின் போது, 2.1 கிலோமீட்டர் தொலைவில் புவியுடனான தொலைத்தொடர்பை இழந்தது. வெறும் 14 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட லேண்டரை தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அதே சமயம், சந்திராயனிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலாவைச் சுற்றிவந்து சிறப்பான முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சந்திராயன் 3 தொடர்பான முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் முதல் சந்திராயன் 3 திட்டம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் நான்கு ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளனர். இத்திட்டத்தில் பணிபுரிய மூன்று துணைக் குழுக்களைக் கொண்ட தலைமைக் குழுவை உருவாக்கிய இஸ்ரோ, சந்திராயன் 2 ஆர்பிட்டர் சரியான முறையில் செயல்பட்டு வருவதால், புதிய மிஷனில் ஒரு லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே அனுப்ப விஞ்ஞானிகள் குழு முடிவு செய்துள்ளது.

செவ்வாயன்று(நவம்பர் 12), கண்காணிப்புக் குழு சந்திராயன் 3 இன் கட்டமைப்பு குறித்து மறுஆய்வு செய்தது. உந்துவிசை, சென்சார்கள், ஒட்டுமொத்த பொறியியல், வழிசெலுத்தல் மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான பல்வேறு துணைக்குழுக்களின் பரிந்துரைகளையும் இக்குழு ஆய்வு செய்தது என டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பணிகள் முழு வீச்சில் துவங்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நவம்பர் 2020-ல் சந்திராயன் 3 நிலாவில் தரையிறங்க காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது இஸ்ரோ. மேலும் சந்திராயன் 3ன் மூலம் அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்தச் சூழலிலும் தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்படும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 2 வெளியிட்ட முப்பரிமாண புகைப்படம்?

நிலாவின் மேற்பரப்பில் உள்ள கிராடர் பள்ளக் குழியை சந்திரயான் 2 விண்கலம் எடுத்த முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ நேற்று(நவம்பர் 13) வெளியிட்டுள்ளது.

இதில் டிஎம்சி-2 என்ற டெரைன் கேமரா, நிலவின் நிலப்பரப்பு முழுவதையும் தெளிவாக படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. நிலாவின் மேற்பரப்பில் உள்ள பெரும் பள்ளங்கள், சிறு பள்ளங்கள், முகடுகள் என அனைத்தையும் மிகத் தெளிவாக முப்பரிமாண வடிவில் படம் எடுத்து அனுப்பியிருக்கிறது. தற்போது கிடைத்துள்ள படங்களை ஆராயும் போது, எதிர்கால வாழ்விடத்திற்கான சாத்தியமான இடங்கள் குறித்து அறிய முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon