மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

உள்ளாட்சித் தேர்தல்: தனித்து மலர்கிறதா தாமரை?

உள்ளாட்சித் தேர்தல்:  தனித்து மலர்கிறதா தாமரை?

உள்ளாட்சித் தேர்தல் களம் சூடாகிக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நேரடிப் பணிகளைத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடங்கள் என்ற பங்கீடு ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்து சென்னை வந்து சேர்ந்த பிறகு முடிவு செய்யப்படலாம் என்கிறார்கள்.

இதனிடையே பாஜக தலைமையகமான கமலாலயத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவாதங்கள் தீவிரமாகியிருக்கின்றன. கடந்த நவம்பர் 12 ஆம் தேதி பாஜகவின் மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், ‘சின்னத்தில் போட்டியிடக் கூடிய அனைத்து இடங்களுக்கும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்ட அளவில் விருப்ப மனுக்கள் கொடுக்கலாம்’ என்று அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையே பாஜகவின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளரும் தமிழக பொறுப்பாளரான பி.எல். சந்தோஷிடம் தமிழக பாஜக தலைவர்கள் சிலர், “தமிழகத்தில் நடந்து முடிந்த இரண்டு இடைத்தேர்தல்களில் பாஜகவை அதிமுக மதிக்கவே இல்லை. விழுப்புரம் சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை விக்கிரவாண்டிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் இதே நிலையைத்தான் தொடர்வார்கள். ஏனெனில் அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் நமது ஆதரவோ, டெல்லி அனுசரனையோ தேவையில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக ஏன் தனித்துப் போட்டியிடக் கூடாது?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அவர்கள், “ தனித்துப் போட்டியிடுவதன் மூலம் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் உள்ள பாஜகவினரைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த முடியும். கூட்டணி வைத்தால் நாம் போட்டியிடுகிற பகுதிகளைத் தவிர பிற பகுதி பாஜகவினர் சாவகாசமாக பொழுது போக்குகிறார்கள். தனித்து நிற்கும் போதுதான் எல்லா பகுதிகளிலும் தேர்தல் காய்ச்சலை உணரவைக்க முடியும்.

மேலும் மத்திய மோடி அரசின் மக்கள் நலத் திட்டங்களை தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமமாக- நகரமாக கொண்டு சேர்க்க இது அரிய வாய்ப்பு. மோடி அரசு ஒதுக்கிய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை தமிழக அரசு தன்னுடைய திட்டம் போல சொல்லிக் கொண்டிருக்கிறது. இதுபோல் மத்திய அரசின் பல மக்கள் நலத் திட்டங்கள் அதிமுகவால் மூடிமறைக்கப்படுகிறது. அதையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல இந்த தேர்தலை நாம் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

2011 உள்ளாட்சித் தேர்தலில் பாஜக இரு நகராட்சி, இரு ஒன்றியங்களில் ஜெயித்தது. அப்போது மோடி ஆட்சி இல்லை, காங்கிரஸ் ஆட்சி. அப்போதை விட இப்போது தமிழக பாஜக நன்கு வளர்ந்திருக்கிறது. எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு தோதான இடங்களில் தனித்தே போட்டியிடலாம்” என்று யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

இதை மாநில அமைப்புப் பொதுச்செயலாளருடனும் மத்திய தலைமையுடனும் ஆலோசிப்பதாக பி.எல். சந்தோஷ் கூறியிருக்கிறார்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon