மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் : உச்ச நீதிமன்றம்!

ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் : உச்ச நீதிமன்றம்!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து மீளாய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 14) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பிரான்சுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட 36 ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, ரஃபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்த விசாரணையும் தேவையில்லை . இதில் எந்த விதமான முறைகேடும் நடந்ததாகத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜனவரி 2ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்,வினித் ஆகியோர் மீளாய்வு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் தி இந்து பத்திரிகை பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிட்ட ரஃபேல் ஒப்பந்தம் குறித்த கட்டுரையில் வெளியான தகவல்களையும் சேர்க்க வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் திருடப்பட்ட ஆவணங்களை ஏற்கக் கூடாது என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசு சார்பிலும், மனுதாரர்கள் சார்பிலும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியாக மே 10ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கிஷன் கவுல், ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அனைத்து மீளாய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் மறுப்புத் தெரிவித்துள்ளனர். ரஃபேல் ஒப்பந்த வழக்கில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது அவசியம் என்று நாங்கள் கருதவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon