மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஐஐடி மாணவி தற்கொலை: காவல் ஆணையர் விசாரணை!

ஐஐடி மாணவி தற்கொலை: காவல் ஆணையர் விசாரணை!

சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டது குறித்துக் காவல் ஆணையர் விஸ்வநாதன் விசாரணையைத் தொடங்கியுள்ளார். விசாரணை ஒரு பக்கம், மாணவர்கள் போராட்டம் ஒரு பக்கம் என சென்னை ஐஐடி வளாகம் பரபரப்பாகக் காணப்படுகிறது.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமை அன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்று ஃபாத்திமா லத்தீப் தனது செல்போனில் குறிப்பு எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தனது மகள் மத ரீதியிலான மற்றும் ஒரு முஸ்லீம் மாணவி படிப்பில் எப்படி முதல் இடம் வரலாம் உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்ததாகவும் அவரது தந்தை அப்துல் லத்தீப் பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஃபாத்திமாவின் இறப்புக்கு நீதி கேட்போம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே அவரது தாய் தனது மகளைப் பற்றி உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என அஞ்சி அதற்கும் நாங்கள் மறுப்புத் தெரிவித்துவிட்டோம். ஆனால் அவளது பெயர் ஃபாத்திமா லத்தீப் ஆகிவிட்டதே? என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

” பனாரஸில் படிக்க அவளுக்கு இடம் கிடைத்தும், வட மாநிலங்களில் கும்பல் கொலை உள்ளிட்ட பிரச்சினைகளை நினைத்து நாங்கள் அஞ்சினோம். இதனால் அங்கு அனுப்ப மறுத்தோம். தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து சென்னை ஐஐடியில் படிக்க அனுப்பினோம். ஆனால் இங்கும் தனது மகளுக்குத் தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே ஃபாத்திமா லத்தீப் இறப்புக்கு நீதி கேட்டு ஐஐடி மாணவ அமைப்பினர் ஐஐடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வழக்கை கோட்டூர்புரம் உதவி ஆணையர் கே.என்.சுதர்சன் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் விசாரணையைக் கையிலெடுத்துள்ளார். இன்று ஐஐடிக்கு சென்ற அவர் விசாரணையைத் தொடங்கியுள்ளார். இதுவரை 4 போலீசார் உட்பட 22 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் மாணவி செல்போனில் இருந்து வெளியான குறிப்பின் உண்மைத் தன்மையைக் கண்டறிய மாணவியின் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon