மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

ஜேஎன்யூ: விடுதிக் கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட்டது!

ஜேஎன்யூ: விடுதிக் கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட்டது!

ஜேஎன்யூ மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, விடுதிக் கட்டண உயர்வு அறிவிப்பை பல்கலைக்கழக நிர்வாகம் திரும்பப்பெற்றுள்ளது.

கடந்த இரு வாரத்துக்கும் மேலாக, ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் 4 ஆம் தேதி இன்டர் ஹாஸ்டல் மேனேஜ்மென்ட் (ஐ.எச்.ஏ) குழுவால் விடுதி மாணவர்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட புதிய வரைவு வெளியானது. இப்புதிய வரைவில் மாணவர்கள் ஹாஸ்டலுக்கு வரும் நேரம், உணவு விடுதிக் கட்டண உயர்வு, உடைக் கட்டுப்பாடு போன்ற பிற்போக்குத்தனமான கட்டுபாடுகள் இருப்பதாக ஜேஎன்யூ மாணவர் சங்கம் குற்றம் சாட்டுகிறது. மாணவர்கள் இந்த வரைவு வெளியானதில் இருந்து எதிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய ஜேஎன்யூ மாணவர்கள் சங்கத் தலைவர் ஆயிஷீ சிங், ''எங்களை அழைத்துப் பேசாமலேயே விடுதி நிர்வாகம் இந்த முடிவை தன்னிசையாக எடுத்திருக்கிறது. எங்களின் கடிதங்களுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. விடுதிக் கட்டணம் கணிசமாக சுமார் 300 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உடைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நூலகம் சீக்கிரத்திலேயே மூடப்படுகிறது” என்று குற்றம் சாட்டி இருந்தார்.

நவம்பர் 11ஆம் தேதி, ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளுக்கு வெங்கையா நாயுடு செவி சாய்க்க வேண்டும் என பட்டமளிப்பு விழா நடந்த அரங்கத்தை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது விடுதிக் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இதுகுறித்துத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய கல்வித்துறை செயலர் ஆர்.சுப்ரமணியம், ''விடுதிக் கட்டணம் மற்றும் பிற வரைவுகளுக்கான அறிவிப்பை, நிர்வாகக் குழு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அத்துடன் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு உதவ சிறப்புத் திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது. அதனால் மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்புங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், “ரூ. 20-ல் இருந்து ரூ. 600-ஆக உயா்த்தப்பட்டிருந்த ஒரு மாணவருக்கான விடுதி கட்டணம் தற்போது ரூ. 200-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 10-இல் இருந்து ரூ. 300-ஆக உயா்த்தப்பட்ட இருவா் வசிக்கும் அறையின் கட்டணம் தற்போது ரூ. 100-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறின.

அதே சமயம், கட்டண உயா்வு திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது கண்துடைப்பு என்று ஜேஎன்யு மாணவர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘தங்கும் விடுதி கட்டண உயா்வைக் கண்டித்து மட்டும் நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. இதற்கான சேவைக் கட்டணமாக ரூ. 1,700 விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீா், மின்சாரம் ஆகியவற்றுக்கு இதுவரை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால், தற்போது இவற்றுக்கு தனியாக கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வால் மாணவா்கள் பாதியிலேயே வெளியேறும் சூழல் ஏற்படும்’ எனக் கூறுகின்றனர்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon