மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

ராகுல்காந்தியை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

ராகுல்காந்தியை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி குறித்து, “சவுகிதாரே திருடராக மாறிவிட்டதாக உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்திவிட்டது” என்று கூறினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி.யாக இருந்த மீனாட்சி லேகி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். எனினும் ராகுல் காந்தியின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

இவ்வழக்கில் இன்று (நவம்பர் 14) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. மேலும், “இனிவரும் காலங்களில் ராகுல் காந்தி மிகுந்த கவனத்துடன் நீதிமன்ற விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என எச்சரிக்கிறோம். ராகுல் மீதான வழக்கையும் இத்துடன் முடித்துவைக்கிறோம்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon