மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

சிறு படங்களை கொலை செய்யும் தியேட்டர்கள்!

சிறு படங்களை கொலை செய்யும் தியேட்டர்கள்!

காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் சந்திக்கும் பிரச்சினையை மையக் கருவாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் மிக மிக அவசரம். இப்படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்தது. இதனால் கடந்த மாதம் இப்படம் ரிலீஸ் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து மிக மிக அவசரம் படத்திற்கு 125 திரையரங்குகள் ஒதுக்கீடு செய்தனர். இதற்காக கடந்த வாரம் சென்னையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றை இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி நடத்தினார். செப்டம்பர் 8 அன்று மிக மிக அவசரம் 125 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

எண்ணிக்கை 125 என்றாலும், காட்சிகள் ஒதுக்கீட்டில் திரையரங்கு உரிமையாளர்கள் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பத்திரிகையாளர்களும், படம் பார்த்தவர்களும் கொண்டாடித் தீர்க்கும் ஒரு படத்திற்கு மக்கள் திரையரங்கிற்கு வரும் நேரங்களில் காட்சிகள் கிடைக்கவில்லை. என் படத்திற்கு எவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள். முதலில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இப்போது கிடைத்தும் பயனில்லை. குடும்பங்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மாலை வேளைகளில் காட்சிகள் தராதது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் “காலைக் காட்சிகளிலும், மதிய வேளைகளிலும் மக்கள் வந்து குவிய நான் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் நடித்த படங்களை தயாரிக்கவில்லை. பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய ஒரு படம், பெண்கள் திரையரங்கிற்கு வரும் வேளையில் காட்சி இருப்பதுதானே சரி. பெண்கள் பார்க்கவேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட சிறு படங்கள் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும். பெண்கள் படும் பாடுகள், அவர்கள் தாங்கி சகிக்கும் பிரச்சனைகள் என திரைக்கு வரவேண்டியது எவ்வளவோ உள்ளது. திரையரங்குகள் இப்படிப்பட்ட நல்ல படங்களுக்கு பாராமுகம் காட்டுவது சிறுபடங்களை அழித்துவிடும். திரையரங்குகளுக்கு செலுத்தும் காசும் நட்டத்தை அதிகப்படுத்தும். எவ்வளவு செலவு பண்ணி பப்ளிசிட்டி செய்து என்ன பயன்?” என்று சோகத்தில் உறைந்துபோயிருக்கிறார்.

“திரையரங்குகள் சிறுபடங்களை வாழவைப்போம் என சொன்னாலும், நட்சத்திரங்களின் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன என்ற உண்மையை அனுபவிக்க அனுபவிக்க கசக்கிறது. வருத்தமளிக்கிறது. எவ்வளவுதான் கத்திக் கத்தி போராடினாலும். இதை ஒழுங்குபடுத்த முடியவில்லையே என்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது. ஒரு மொக்கை படத்தை எடுத்துட்டு தியேட்டர் கேட்டால் தப்பு. எல்லா பக்கமும் பரவலாக மதிக்கும் ஒரு படத்திற்கு மாலை வேளைகளில் காட்சி ஒதுக்கீடு செய்யாமல் கருணையற்ற கொலை செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? "ஒத்த செருப்பு", மிகமிக அவசரம் போன்ற படங்களுக்கு இதுதான் நிலையா? ஒரு சில திரையரங்க நண்பர்களுக்காக இந்த உண்மையை வெளியில் பேசாமல் இருக்க முடியவில்லை. மாலை வேளைகளில் டிக்கெட் கேட்டு காட்சி இல்லாமல் வேறு படங்களுக்கு செல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு அமைதியாக இருக்க முடியவில்லை. சிறுபடங்கள் மரியாதை பெறும்போது மட்டுமே சினிமாவின் மரியாதை மேலும் உயரும். ஆனால்... சாபக்கேடாக அது திரையரங்க வாசலிலேயே தற்கொலை பண்ணிக் கொள்கிறது. இன்னும் எத்தனை படங்களை இப்படி தற்கொலை செய்துகொள்ளக் கொடுப்போமோ தெரியவில்லை. இன்னும் முட்டி மோதி திண்டாடும் ஒவ்வொரு சிறு படத் தயாரிப்பாளர்களின் குரலாக முதல் குரல் என் குரல் என்றிருக்கட்டும்” என்று மிகக் காத்திரமாக தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon