மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

ஆந்திர அரசியலை மிரட்டும் மணல்!

ஆந்திர  அரசியலை மிரட்டும் மணல்!

ஆந்திராவில் சில மாதங்களாக நிலவும் மணல் பற்றாக்குறையால் கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சில கட்டுமானத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கண்டித்து இன்று (நவம்பர் 14) ஆந்திர முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் புதிய மணல் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி இனி மணல் ஆந்திர மாநில மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் மூலமாக மட்டுமே விநியோகிக்கப்படும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

மாநிலத்தில் 13 மாவட்டங்களில் ஏற்கனவே 41 மணல் குவாரிகளை அரசாங்கம் அமைத்துள்ள நிலையில், அவற்றை அக்டோபர் மாதத்திற்குள் ஒரு கட்டமாக 70-80 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. சுமார் நூறு மையங்கள் மூலம் மணல் வாடிக்கையாளர்களுக்கு விநியோகப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய மணல் கொள்கைக்கு தெலுங்குதேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. பல இடங்களில் போராட்டமும் நடத்தியது. இந்நிலையில் சில மாதங்களாக மணல் தட்டுப்பாடு அதிகமானதால் தெலுங்குதேச கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவே, ‘மணல் தீக்‌ஷா’ என்ற பெயரில் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

இந்தப் போராட்டத்தின் மூலம், “பழையபடி இலவச மணல் கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். தற்கொலை செய்துகொண்ட கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ .25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். கடந்த 5 மாதங்களில் வாழ்வாதாரத்தை இழந்த ஒவ்வொரு கட்டுமானத் தொழிலாளருக்கும் மாதத்திற்கு ரூ .10,000 இழப்பீடு வழங்க வேண்டும்” என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

"ஒய்.எஸ். ஜெகன் ரெட்டியின் மாஃபியா ஆட்சியில் 50 கட்டுமானத் தொழிலாளர்கள் தற்கொலைக்கு வழிவகுக்கும் செயற்கை மணல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அவர்களது குடும்பங்கள் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளன. கட்டுமானத் துறை 30 லட்சம் மக்களை பாதிக்கும் குழப்பத்தில் உள்ளது. தாமதமாகிவிடும் முன்பு அவர் எழுந்திருக்க வேண்டும்” என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்குதேசத்தின் இந்த போராட்டத்துக்கு ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தபிறகு பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த மணல் விவகாரத்தில் மாநிலம் முழுதும் ஜெகனுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சரியாகப் பயன்படுத்தி தனது அரசியல் ஆயுதமாக மணல் சட்டியை ஏந்தியுள்ளார்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon