மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

கோவை மாவட்டம் இருகூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்கள் மீது ரயில் மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கவுதம் ஆகிய இரு இளைஞர்கள் சூலூர் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து முடித்திருந்தனர். கல்லூரித் தேர்வில் தோல்வி அடைந்திருந்த அவர்கள் அரியர் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அதே கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வரும் கொடைக்கானலைச் சேர்ந்த சித்திக் ராஜா, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்வனேஷ், நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் ஆகிய மூவருடன் இணைந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் ராவுத்தர் பிரிவு பகுதியில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கிருந்து மது பாட்டில்களை வாங்கிய அவர்கள் அந்த பகுதியில் அமைந்திருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மீண்டும் மது அருந்தியுள்ளனர்.

சிறிது நேரத்தில் மது போதை தலைக்கு ஏறிய அவர்கள் ஐவரும் தண்டவாளத்தில் மயங்கிக் கிடந்துள்ளனர். அந்த நேரத்தில் கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் அந்த வழியாக வந்துள்ளது. அந்த ரயில் விஷ்வனேஷ் தவிர்த்து தண்டவாளத்தில் படுத்திருந்த நான்கு பேர் மீது ஏறியது. அதில் அவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் நால்வரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனை செய்வதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஷ்வனேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போத்தனூர் ரயில்வே போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 14 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon